Dec 22, 2011

ஏசுவே எம் ஜீவனே!

இயேசுவை
மனமே
இதயத்தில்
இறுத்து,
இன்னல்கள்
விலகிடுமே!!

காசினில்
யாவும்
அன்பென்றும்
நிலைத்து,
காரிருள்
அகன்றிடுமே!!

போற்றுவோம்
இறையே
இயேசுவை நாமே!
நானிலம்
செழித்து,
நாற்பக்கம்
பகையும்
அழிந்திடவே!!

அன்பினைப் பேணு;
மாசினை அகற்று!
மகிழ்ச்சியைப்
பெருக்கி,
மாண்புடன்
வாழ்ந்திடவே!!

இயேசுவின்
வழியை
உறுதியாய்ப்
பற்று!
உயர்ந்திடுவாய்
மனமே!!

இயேசு
எம் ஜீவன்,
எமக்கில்லை
துயரம்,
மேய்ப்பனும்
அவனே
எனை மீட்பனும்
அவனேயாம்!!                                          -சுரேஜமீ 

Dec 12, 2011

சர்க்கரை நோய்?

சர்க்கரை நோய்?

கணையம்
கடவுள் கொடுத்த
வரம்!

ஐம்புலன்களின்
அடக்கவில்லை எனில்
ஆறறிவின்
பயனேது?
உண்ணும் உணவே
சர்க்கரையாய்  மாறி,
இரத்தத்தில் கலந்து,
சத்தாக மாறும்,
என அறிவியல்
சொல்லியும்
அறியாமல் நாம்,

துரித உணவும்,
நினக்கும்போதெல்லாம்
உண்பதும்,
கணையத்திற்கு ஒவ்வா!

வண்டு தேனை
மலரிலிருந்து
உறிஞ்சுவது போல,
கணையம்
சர்க்கரையைப்
பிரித்தெடுக்கும்!

செரிமானத்திற்க்குத்
தேவையான
கணைய நீர்
சுரக்கா சர்க்கரை
சிறுநீராய் வெளியேற,
முறையான சர்க்கரை
இரத்தத்தில் கலக்கிறது!

தேவைக்கு மிகுதியானால்
சேமிப்பும் நடக்கும்!
என்ன விந்தை
இறைவன்
படைப்பில்!

சேமிப்பு கரைந்தாலோ,
கணையம் ஏற்காத
சர்க்கரை உடலில்
இருந்தாலோ,
நோய் என்று சொல்கிறது
மருத்துவம்!

மனிதா
சற்றே யோசி!
காரணம்
கடவுளின்
படைப்பா?
உனது
பரபரப்பா?

நிதானமாக
உண்!
நினைவோடும்
கால அளவோடும்,
உண்!
நோயற்று,
உன்னதமாக
வாழ்!                                                                          - சுரேஜமீ

Dec 11, 2011

மகாகவி பிறந்த நாள்!

மகாகவி பிறந்த நாள்!

கம்பனும்
வள்ளுவனும்
இளங்கோவும்
கலந்து பேசி
தமிழ்த் தாயின்
முன்தோன்றி
ஒரு வரம்
வேண்டினர்!

தூங்கும்
தமிழினத்தை
துயிலெழுப்ப,
தூரிகையைத்
தட்டி எடு என்று!

தானே கருவாகி
தரணியில்
அவதரித்தாள்;
பாரதி எனும்
உருவெடுத்தாள்;
தமிழென்னும்
அமுது படைத்தாள்;
குயில்கூடத் தமிழ்
பாடியது,
அவன் குரல் கேட்டு!
மரம், செடி, கொடிகளெல்லாம்
இசை பாடியது
அவன் தமிழ் "பா" க்கு!
தமிழன் தலை
நிமிர்ந்தான்!
தரணியில் இனி
எவர்க்கும் யாம்
அடிமை இல்லையென்று!

அந்நாள் இந்நாள்!
அவதாரத் திருநாள்!

வாழ்க தமிழ்! வளர்க பாரதி புகழ்!!                      - சுரேஜமீ














Nov 16, 2011

கடவுள்

கடவுளைத் தேடி
அலையும் நீ
உன்னைக்
கடந்து,
உனக்குள்
ஏகி,
அலை பாயும்
மனதைத்
தாண்டி
தவம் செய்யும்
திடம்
பெற்றால்,
செம்புலப்பெயல்
நீர்போல
சிந்தையும்
செயலும்
ஒன்றாகும்!
உடலும்
உள்ளமும்
உறுதிபட
ஒளிரும்
சுடரே
அறிவாகும்!
கட உள்
நீ என்று
அறிவாயே!                                              -சுரேஜமீ

Oct 20, 2011

அவசர யுகம்!!

பாதையில்
தொடர்ச்சியாக
வாகனங்கள்!
ஒன்றன் பின் 
ஒன்றாக,
சிறிதும் 
ஓசையின்றி
செல்கின்றன!
வளர்ந்த நாட்டில்!!

அடுத்த 
காட்சியில் 
களம் 
ஒன்றே!
ஆனால் 
காணல் வேறு!!

நாற்திசையும் 
ஓசை!
வாகனங்கள்
ஒன்றோடு
ஒன்று 
மோதும் நிலையில்!
இந்தியாவில்!
இன்னும் நாம்
வளரவில்லையோ?

அவசர கதியில்
செல்கின்றோம்;
அடிபட்ட பின்பே
தெளிகின்றோம்!!                              - சுரேஜமீ

Oct 13, 2011

வானளாவிய கட்டிடங்கள்!

வானளாவிய
கட்டிடங்கள்
வாழாவெட்டியாய்
நிற்கின்றன
குவைதில்!                                                    -  சுரேஜமீ 

Oct 8, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்

கணினி உலகின்
களத்தை 
தன்னகத்தே
திருப்பி நம்
எல்லோரையும்
ஆப்பிள் என்ற
ஒரு சொல்லால்
ஆட்கொண்டவன்
இன்று ஆளாத்
துயரத்தில்
ஆழ்த்திவிட்டுச்
சென்றுவிட்டான்!

தோல்வியில் 
தொடங்கி
வெற்றியைத்
தொட்டவனின்
வாழ்க்கை
கடைசியில்
தோற்றது
மரணத்திடம்!
ஐ உலகமோ
இன்று 
ஐயோ உலகமானது!
சரித்திரத்தை
மாற்றியவனோ
ஒரு
சரித்திரம் ஆனான்!

ஐ பாடு தொடங்கி
ஐ போன் வரை
அலறும்  சத்தம்
அகிலம் கேட்கிறது!
உருவாக்கிய நீயோ
ஆழ்ந்து உறங்கிவிட்டாய்!
மீண்டு வா!
மீள் சரித்திரமாக!!                                        - சுரேஜமீ

Oct 7, 2011

பிறந்த வீடு போகும் பெண்!

காலை முதல்
இரவு வரை
காபி,
உணவு,
உடை,
உறக்கம்
என்று
தேடித் தேடி
உபசரித்த
எனக்கு,
என்னைத் தேடி
எல்லாம் வந்தது
தாய் வீட்டில்;
சற்றே தலை
சாய்த்தேன்
அவள் மடியில்!                            - சுரேஜமீ

Oct 2, 2011

மலர்ந்த காதல்!

வானும்
மண்ணும்
நோக்கின தன்
மலர்ந்த 
காதல் சொல்ல!
வானம் மெல்ல
அன்பை
மழையாய்ப்
பொழிந்தது!
மண்ணும் சற்றே 
நாணிப் பச்சைப்
போர்வை கொண்டு
தன்னை 
மறைத்தது!
மகிழ்ச்சி 
வானுக்கும்
மண்ணுக்கும் 
மட்டுமல்ல...
பூகோலமெங்கும்....
பயிர்ப்பன, 
பறப்பன, 
ஊர்வன, 
நடப்பன,
அனைத்தும் 
மகிழ்ந்தன.....                        - சுரேஜமீ

Oct 1, 2011

மகத்துவம்

ஜனனத்தின் 
ரகசியம் 
தெரிந்த
உனக்கு
மரணத்தின் 
மகத்துவம்
தெரியாதெதேனோ?                          - சுரேஜமீ

Sep 30, 2011

இறையும் மறையும்!

இறையும் மறையும்
மறையும் இறையும்
ஒன்றே!

மனமே நில் 
ஓரிடத்தில்
சற்றே உற்றுநோக்கு 
உன் செயலை!

உள்ளமும் சொல்லும்
செயலும் உண்மை வழியே
சென்று
உலக நலனில்
முடிந்தால்
நீயே
முற்றும் அறிந்த
இறையே
என்று
மறைகள் ஓதும்
நன்றே!

நிரந்தரமில்லா உலகில்
நிதர்சனமற்றுத் திரிந்து
அழுக்காறு , அகங்காரம், ஆசை, 
ஆட்டிப்படைக்கும் பந்தம் பற்றி 
நெறிகள் தவறிய செல்வம் ஈண்டு 
நீதி மாறிய பாதை சென்றால் 
நித்தம் உன்னை கொல்லும்
அதுவும்
இறையே என்று
மறைகள் ஓதும்
நன்றே!!

உருவம் அருவம்
எது நீ ஏகிலும்
இன்றே
செல்வாய் 
அதன் வழி
நன்றே
உணர்வாய்
இறையும் மறையும்
என்று!
நலமே விளையும்
நன்று !                                                                                     - சுரேஜமீ

Sep 24, 2011

சங்கீதம்!

மெல்ல இரவு
தன்னை 
மழித்து
ஆதவன்
வரவு நோக்கிக் 
காத்திருக்கும் 
அதிகாலை வேளையில்,

இனியதொரு
நாள் தொடங்கும்
புட்கள் முதல் 
பூக்கள் வரை
புன்னகைக்கும்
மெல்லிசை 
சங்கீதம்!

மலையினிடை
உருவாகி
மண் நோக்கிப்
பெருக்கெடுத்து 
சமவெளியில்
சாலையிட்டு 
கடல் கலக்கும்
புனல் எழுப்பும் 
புன்னகையும் 
சங்கீதம்!

பெருங்காட்டின் 
மரங்களிடைப் 
பூங்காற்று 
தவழ்ந்து 
வரும் ஓசை
சங்கீதம்!

கார்மேகக் 
கூட்டமது 
போர்மழைக்கு 
முன்னாலே 
வாழ்த்தும் அந்த
மெல்லிய தூறல் 
தரும் ஓசை
சங்கீதம்!

வெங்கதிரோன் 
வெப்பத்தில் 
காய்ந்த மரம்
சருகாகி
நிலமீது விழும் ஓசை
சங்கீதம்!

கருவுற்ற 
தாயின் 
கருப்பையில் 
வளருமந்த சேய்
கொடுக்கும் ஓசை
ஒரு இதமான
சங்கீதம்!

அடிப்படையாய் 
இவையிருந்து 
அடி தொடுத்த 
ராகங்கள்
மடை திறந்த 
வெள்ளம்போல் 
மகிழ்ச்சியது 
தந்ததென்றால் 
மறுப்போரும் 
எவருண்டோ?                                         - சுரேஜமீ

Sep 21, 2011

பெண்ணே நீ ஒரு அதிசயம்!

பெண்ணே 
நீ ஒரு
அதிசயம்!

அறியாத 
வயதில் 
தாயாய்
உன் அன்பில்
நான்
உலகத்தை
பார்த்தேன்!
என் பூமி
உன்னைச்
சுற்றி வந்தது!

அறிந்தும் 
அறியாத 
வயதில்
நீ தொலைவில்
நின்றால்
ரசிக்கத்
தோன்றும்!
அருகில் 
வந்தால்
அணைக்கத்
தோன்றும்!
காதல் என்று
காலம் 
சொன்னது!
காமம் என்று
பருவம் சொன்னது!
ஆனால் 
அது ஒரு
ஈர்ப்பென்றேன்!

அறிந்த வயதில்
அனுபவம்
சொன்னது! 
பெண்ணே 
நீயல்லால்
இப்புவி
என்றோ
ஒரு 
போர்க்களம் 
ஆயிருக்குமென்று!

ஏனெனில்
நீ தானே 
போரைத்
தொடுப்பதும்
போரைத் (bore)
தடுப்பதும்?

பெண்ணே 
நீ ஒரு 
அதிசயம்!

அகிலம் 
இயங்குவதே 
உன் அன்பு
என்னும்
தாய்மை!
பாசம்!
மென்மை!
மேன்மை!
காதல்!
கனிவு!
பண்பு!
பகிர்வு!
பரிவு!
ஆளுமை!
தோழமை!
அகிலம்!
அனைத்தும்!                                                    - சுரேஜமீ

Sep 17, 2011

குவைத் சின்மயா கலை விழா!

காலையில் ஒரு
கலை விழா
கலாச்சாரம் 
வீழாது இருக்க
குவைத் சின்மயா 
குழுவின் 
கவின் விழா!

அரும்பிய
மலர்களின்
அற்புத நடனம்
ஆண்டவனின்
ஆனந்தத் தாண்டவமோ
எனக் காண்பவர்
மனதில் களிப்பினை
உண்டாக்கிய
ஒரு விழா!

சிறார்களின்
சீரிய பங்களிப்பும்
சேவிகாக்களின்
சிந்தனை வடிவும்
பெற்றவர், உற்றவர்,
மற்றவர்களின்
வாழ்த்தும்
குருவின் ஆசியும்
நேர்த்தியாய்
நேரத்தை நகர்த்தின
இனி எப்போது
இதுபோல் ஒரு
விழா வருமென?                                          - சுரேஜமீ

(செப்டம்பர் 16 , 2011 )

Sep 13, 2011

குழந்தை!

நீல வானம்
நிறை மதி
கார்மேகம் 
கடல் அலை
மழைத் தூறல்
மலர்த்தோட்டம்
நீரோடை
நெல் நாற்று
இன்னிசை 
இளங்காலை 
இன்னும் பல
இயற்கை அழகெல்லாம்
கூடி நின்றது 
குழந்தை 
வடிவில்!
குதூகலப்பட்டாள்
ஈன்ற 
அன்னை!     
இதுகாறும் 
இதற்காகத் 
தவமாய்க்
கிடந்து
தாயானவள்!                               -சுரேஜமீ

Sep 9, 2011

ஓவியம்!

சிதறிய
எண்ணங்களை
சீராக்கி ஒரு
புள்ளியில்
குவிக்க
இதயம் தீட்டிய
காவியம்!
விரல்கள்
வரைந்த
ஓவியம்!!                                                - சுரேஜமீ

புன்னகை!

இதயங்களை
இணைக்க
இதழ்கள்
விரிக்கும்
வலை!                                           - சுரேஜமீ

ஓணம்!

மன்னன் 
மகாபலி
தன்
ஆட்சியின்
மதிப்பீடு அறிய
மக்களை நாடி 
வந்த அற்றைத்
திருநாளே 
திருவோணம்!

இந்நாளில்
இனிய வாழ்த்து
பரிமாறி 
புத்தாடை உடுத்தி
பூக்கோலம் இட்டு
பாடி, ஆடிக்
கொண்டாடும் 
இந்த 
அத்தம் பத்தினும்
திருவோணத்
திருவிழா!

மலர்களும்
மனங்களும்
இணைந்து
மெல்லிய 
மனம் வீசும்
தென்றல்
தவழும் 
இந்நாளில்
எங்கும்
மகிழ்ச்சி பரவட்டும்!!                                                          - சுரேஜமீ

இனிய ஓணம் வாழ்த்துக்கள் நண்பர்களே!!

Sep 8, 2011

அரசியல்!

அரசியல் பிழைத்தோர்க்கு
அறமே கூற்றாகும் 
என்றது சிலப்பதிகாரம்!
ஆனால் இன்று 
நடப்பதோ
குற்றம்,கொலை,
கொள்ளை, அபகரிப்பு, 
வஞ்சனை, சூழ்ச்சி,  
அபரிமித செல்வம்,
ஆட்படை , அரசாட்சி 
வேண்டுவோர்க்கு
அரசியலே பிழைப்பாக
இருக்கிறது!

ஊக்கம் தராத
ஆக்கத்தை
அரசியல் தரும்
என்பதை
ஐயன் திருவள்ளுவர்
திருத்தி எழுதியிருப்பார்
இற்றை நாளில்
இருந்தால்!                                                        - சுரேஜமீ

Sep 7, 2011

செங்கொடி!

தன்மகன் போருக்கு
புறமுதுகிட்டான் எனில்
தன் கொங்கை அறுத்த
தம் நாட்டில்
நீதி கிடைக்காதோ
என்று மனம் வெதும்பித்
தன்னை மாய்த்தால்
தன்சமூகம் 
விழிப்புற்று வீதிக்கு வந்து
போராடி மூவருயிர் 
காக்கும் என்று
வீழ்ந்தாள் 
வெந்தணலில்
ஒரு பைங்கொடி
அவள் பெயர் 
செங்கொடி! 

வாழவேண்டிய
வயதில்
வாழ்க்கையைத்
தொலைத்தவள்!

ஏ செங்கொடி!
இனக்கொடி காக்க 
இன்னுயிர் ஈத்த 
நீயும் ஒரு தாயே!                                     - சுரேஜமீ

Sep 6, 2011

நட்பு!

உறவு
உதறிய
உணர்வுகளை
உள்ளன்போடு
உறுதியாய் ஏற்கும் 
நட்பு!

வாழ்க்கையின்
ஏற்ற தாழ்வுகளில்
தாமரையின் வேரும்
நீரும் போல 
ஒட்டியிருக்கும் 
நட்பு!

தயக்கம் சிறிதும்
இன்றி தான் 
நினைத்ததை 
கூறும்போது அதன் 
நிறை குறை அலசும் 
நட்பு!

பள்ளத்தை நோக்கி
ஓடும் நீர்போல
வாழ்க்கை 
பயணத்தில்
தொடரும் 
நட்பு!

இப்படி ஒரு
நட்பு
வாய்த்தால்
வாழ்க்கை
என்றும் வசந்தமே!                             - சுரேஜமீ

Sep 5, 2011

கவிஞன்!

கற்ற தமிழும்
கற்பனையும் 
கலந்த கலவை!

சமூகத்தின்பால்
தான் கொண்ட
உணர்வுகளை
எழுத்தாக்கி
சமூகத்துக்கே
திருப்பிக் கொடுப்பவன்!

செவியில் ஏறாத
சிந்தனையைச் 
சற்றே சிந்தைக்குச்
சேர்ப்பான் தன் 
எழுத்தால்!

தமிழையும்
தமிழனையும்
காலத்தைக்
கடந்து 
பயணிக்க வைப்பவன் 
கவிஞன்!!                                                          - சுரேஜமீ

எழுத்தறிவித்தவன்!

நீரின்றி அமையாது
உலகென்றான்!
எழுத்தறிவித்தவன்
இல்லையெனில்
ஏது
உலகு?

ஐந்து வயதில்
அன்னை தந்தையே
உலகாய் இருந்த 
எனக்கு கிடைத்த
அறிவுலகே
என் ஆசான்!
அன்று ஏற்றிவைத்த
தீபம் இன்றும்
இன்னும் பலப்பல
ஆண்டுகள் 
எரிகிறது என்றால்
நீயே என் இறைவன் அன்றோ?

இருபது வருடங்கள்
என் அறிவுக்கு
இரை கொடுத்த
அத்துணை 
ஆசான்களுக்கும்
அடியேனின்
சிரம்தாழ்ந்த 
வணக்கங்கள் பல!                                                 - சுரேஜமீ


(ஆசிரியர் தினம்)

Sep 3, 2011

காதல்!

காதல் என்பது
காலத்தை 
வீணடித்து 
கற்பனைக்
கோட்டையில் 
வாழ்ந்து 
ஒருவனை நினைத்து 
அடுத்தவனைக் 
கைபிடிப்பதல்ல!

ஒருகணம் 
கண்ணோடு கண்
நோக்கி 
இதயம்
நுழையும்  
உறவு! 
இருந்தும்
இறந்தும் 
அழியாதது!                                                         - சுரேஜமீ

Sep 2, 2011

எதுவும் சாத்தியம்!

கருவறை தொட்டு
கல்லறை வரை
இந்த பெண்மையின்
துயர்தனைத்
தூக்கி எறிந்த்திட்ட
தூய வரலாற்றில்
அவ்வை முதல் அண்மை வரை
செய்த சாதனைப் 
பெண்களின் 
சரித்திரம் சொல்லும்
எதுவும் சாத்தியம்!

பெண்ணடிமைத் துயர் நீக்கி
பெண்ணுயர்வு போதித்த
பாரதியின் கனவுதனை
நெனவாக்கி
நிலையான இடம் பிடித்த
டாக்டர் முத்துலட்சுமி முதல்
கல்பனா சாவ்லா வரை
பெண்கள் நாம் சாதித்த 
சாதனைகள் சொல்லும்
எதுவும் சாத்தியம்!

முடியாது என்று சொல்ல
இனி என்றும் முடியாது
என ஒருவள் 
சிந்தித்தால் 
சிகரம்கூட 
சிறுமணல் குன்றாம்
எண்ணம் சொல் செயல் வழியே
இறுமாப்புக் கொண்டு
எதிர் நீச்ச்சலடித்தால்
எதுவும் சாத்தியம்!

சத்தியம் சொல்கின்றேன்
எதுவும் சாத்தியம் தான் பெண்ணே!
எதிர்காலம் உன்னை
வரலாறாய் வாழ்த்திடுமே!                                   - சுரேஜமீ 

Sep 1, 2011

காஞ்சியின் காலடியே!

காஞ்சியின் காலடியே
உன் காலடி பற்றினோம்
காத்தருள் பரமகுரு!

கலியுகக் கடவுளே
கருணையின் திருவுருவே
தினம் எமை வாழ்த்திட
உன் திருவடி சரணமே!

எமை மறந்து
யாம் செய்த எத்தனை
குற்றங்கள்!
பொருத்தருள் பரமகுரு
உன் பொற்பதம்
பணிந்திட்டோம்!

புவியினில்
இருக்குங்கால் உன்
திருநாமம் தொழுகவே
தினம் எமைப் பணித்திடு
தெய்வமே எம் நாதா!

காலையின் கதிரும் நீ!
மாலையின் மதியும் நீ!
வருடும் காற்றும் நீ!
வாழ்க்கையின் 
வசந்தம் நீ!!

பிறந்திட்ட அனைவரும் 
பெருமகிழ்ச்சி பெற்றிடவே
பெருமகனே அருள்வாயே
பேரருளை நித்தமுமே!

சரணம் எம் குரு! 
சரணம் எம் குரு!!                                           - சுரேஜமீ

Aug 31, 2011

இனி ஒரு விதி செய்வோம்!


தமிழா!

மூன்று லட்சம்
தமிழர்களின் 
மரண ஓலம் கேட்டு
முடங்கிக் கிடந்த 
உன்னை 
இந்த மூன்று தமிழர்களின்  
மரண ஓலை
தட்டி எழுப்பியது
உன் 
தன்மானம் எழுந்தது!

கூறு பட்டுக்கிடந்த
உன்னை ஒரு
கூட்டமாக இணைத்த
அரசாணை ஒருவேளை
முன்னமே
வந்திருந்தால் நீ
முள்வேலி தமிழனைக்
காத்திருப்பாயோ?

ஒரு தமிழனாய்க்
கேட்கிறேன் எங்கே
உன் வீரம்?
தன்மானம்?
ஒற்றுமை?
அன்று!!!

இனி ஒரு விதி செய்வோம்
என்றான் பாரதி!
இது ஒரு தொடக்கம் தான்!!

தமிழா,
வீழ்ந்தது போதும்!
வீறு கொண்டு எழு!
சினிமாவை வாழ்க்கை என நம்பி
சிந்தனையை
இழக்காதே!
சாதியும் மதமும்
உன்னை சந்தியில்
நிறுத்தி இருக்கிறது!
தாய்த் தமிழ் மட்டும் தான்
உன்னை உலகிற்கு
உணர்த்தும்!

உணர்வு கொள்!
தமிழ் உணர்வு கொள்!
உயர்ந்திடு!
உன்னை
உயர்த்திடு!!                                                        - சுரேஜமீ

Aug 29, 2011

தண்டனை!

காவல், கடுங்காவல், 
கால அளவுகள்,
ஆயுள் தண்டனை,
இரட்டை ஆயுள் தண்டனை,
இவை எல்லாம் குற்றம்
செய்தவனைத் திருத்த 
சட்டம் செய்யும் முயற்சி!

நிச்சயமாக சுயஅறிவு
உள்ள எவனும்
திருந்துவதற்கு 
ஒரு வாய்ப்புதான்
தண்டனை!

ஆனால், 
சட்டம்
வாய்ப்பே
வழங்காத ஒரு
தண்டனை
மரண
தண்டனை!

மனிதம் மாண்டுபோனது
மரண தண்டனையால்!

நாளைய 
விடியலே 
நம்பிக்கையில்தானே?
இந்நிலையில் 
சட்டம் மட்டும்
ஏன் நம்பிக்கை
இழந்தது
மரண தண்டனைக்
குற்றவாளி திருந்த மாட்டனென்று?                                                 - சுரேஜமீ

Aug 28, 2011

தீவிரவாதம்!

ஒருவன் 
சிலநொடிகள் தன்
சிந்தையை 
மறந்ததால் 
சிதறடிகப்பட்டது
அவன் வாழ்க்கைமட்டும் அல்ல!
அருகே நின்ற 
அவனியின் 
பிறப்பும் மனிதனின் 
படைப்பும் தான்!                                              - சுரேஜமீ

காந்தியம்!

நூறு ஆண்டுகளுக்குப்
பின்னும்
காந்தியம் தன் சக்தியை
நிருபித்து இருக்கிறது!

அஹிம்சையின் 
அழியாநிலையை
அகிலம் 
உணர்ந்து இருக்கிறது!

ஆயுதத்தால் 
அச்சுறுத்தும் 
தீவிரவாதமே 
திரும்பிப்பார்!
உன்னைத் 
திருத்திக்கொள்!

அஹிம்சையின் 
அழியாநிலையை
அகிலம் 
உணர்ந்து இருக்கிறது!!

அண்ணல் காந்தி
அன்னா ஹசாரேவாக
அரிதாரம் பூசி மக்களின்
அதிகாரம் வென்றிருக்கிறார்!

இந்தியனே 
உன்னை நீ
வாழ்த்திகொள்!
உன் வலிமையை
உலகுக்கு எடுத்துக்காட்டிய
திருநாள் இன்று!

அண்ணலின் 
கனவை
அன்னாவை பற்றி
வென்றெடு!

வாழ்க பாரதம்!                                  -சுரேஜமீ

Aug 24, 2011

மனிதநேயம்!

முல்லைக்கு தேர் கொடுத்த
பாரி!
பறவைக்கு தன் உடல் கொடுத்த
சிபி சக்ரவர்த்தி!
வாடிய பயிரைக் கண்டபோதெலாம் 
வாடிய வள்ளலார்!
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
இந்த உலகத்தை அழித்திடிவோம் என்ற பாரதி!

இவர்களெல்லாம் வாழ்ந்த இந்நாட்டில் 
இன்று நடப்பது என்ன?

முதியோர் இல்லத்துக்கு
பெற்றோரை அனுப்பும் பிள்ளைகள்!
பிறந்த குழந்தையைத் 
தொட்டியில் எறியும் தாய்!
பக்கத்துக்கு வீட்டில் நடக்கும்
பாதகத்தை வேடிக்கை பார்க்கும்
அவல மனிதர்கள்!
காவலர் எதிரிலேயே 
காணும் கொலைகள்!
போக்குவரத்து நெரிசலில் 
காத்துநிற்கும் உயிர்காக்கும் 
வாகனங்கள்!

ஏ மனிதநேயமே!
எங்கே சென்றாய்?
உலகுக்கே பறைசாற்றிய
என் இனம் இன்று
ஊனமாய் நிற்கிறது 
உனை இழந்து!

மீண்டு வா! மீண்டு வா!
மானுடம் வாழ!                                                           -சுரேஜமீ

Aug 19, 2011

தற்கொலை!

தன்மீது நம்பிக்கை 
இழந்தவன்
தமிழகராதிக்கு 
கொடுத்த கொடைச் சொல்!

உணர்ச்சிகளை
கொச்சைப்படுத்திய 
கோழையின் முடிவை 
விளிக்கும் சொல்!

அமாவாசையன்று 
நிலவைத் தேடி
இனி நிலவே வானில் 
வராதென்று நினைத்த 
முட்டாளின் முடிவுரை!                                         -சுரேஜமீ

Aug 17, 2011

அன்னா ஹசாரே!

இந்தியாவின் இந்நாள்
தலைப்பு செய்தி!

அரசாங்கத்தை அதிரவைக்கும்
ஆற்றல்மிகு காந்தியவாதி!
இந்தியனின்
ஈடில்லா பிரதிபலிப்பு!
உண்மையான லோக்பால் வேண்டி
ஊழலற்ற இந்தியாவிற்காக
எட்டு திக்கும் மக்களை திரட்டி
ஏடுகளின் பக்கத்தை நிரப்பும்
ஐயமற்ற அன்னாவின் உண்ணாவிரதம்!
ஒடுக்க நினைத்த அரசை எதிர்த்து 
ஓங்கி ஒலிக்கும் குரல்கள் எங்கும்!

பட்டொளி வீசிப் பறக்கும் 
தாயின் மணிக்கொடி 
தன்தலையை சற்றே 
தாழ்த்திக்கொண்டது 
தன் மக்கள் படும்பாடு கண்டு!

என்ன கேட்டார் அன்னா?
மக்கள் தேர்ந்தெடுத்த மன்னன்
மக்கள்முன் நிற்க 
மௌனிப்பானேன்?                            - சுரேஜமீ

Aug 16, 2011

நீதி


சாதியின் பெயரால்
நீதி விலை பேசப்ப்படுமாயின்
தாயின் கற்புகூட
தனயன் எதிரில் 
பறிபோகும் நாள் 
வெகுதொலைவில் இல்லை!                                             - சுரேஜமீ

அன்பு!

அன்பிற்கும் உண்டோ 
அடைக்கும் தாழ் என்றான் வள்ளுவன்!
ஆனால் தாழ்இல்லா அன்பு
பாழென்றது பட்டறிவு!                                                          - சுரேஜமீ 

Aug 15, 2011

65-வது சுதந்திர தினம்!



இந்திய விடுதலை
இன்று அகவை அறுபத்து நான்கு கடந்து
அறுபத்து ஐந்தில் அடியெடுத்து வைக்கும் வேளை
நாம் செய்த சாதனைகள் 
நமை காட்டும் அடையாளம்!


உலக வரைபடத்தின் ஒரு பகுதி
இன்று உலகையே
வரையும் படம் என்றால்
அதுதான் நாம் தரும் செய்தி
இந்த உலகத்துக்கு!


மக்களாட்சி முறைக்கு ஒரு
மகத்தான மேற்கோளாய்
மேற்கத்திய நாடுகளே
இந்தியா தானென்று
இறுதியிட்டு கூறுவது
இந்தியனின் பெருமையன்றோ!


பட்டினி சாவினின்று
பரிதவிக்கும் மக்களின்
பசிப்பிணியை
போக்கிட்ட  ஒரு
பசுமை புரட்சி!


அந்நியர் வந்து இங்கு
தொழில் தொடங்கும்
காலம் போய்
அந்நிய நாட்டினிலும்
இந்தியர்கள்
தொழில் செய்யும் காலமிது!


பெண்ணீயம் என்பது
வெறும் ஏட்டில் மட்டுமன்றி
நாற்திசையும் இன்று
நம் பெண்மணிகளின்
சாதனையை நாடறியும் நன்றே!


கல்வியில் நாம் தொட்ட
களமின்று
கணினியுகம் பறைசாற்றும்!
உலக பொருளாதாரம் சற்றே
மந்தமாக,
இந்திய பொருளாதார ஏற்றத்தின்
உச்சி சொல்லும் நம் கல்வியின் மாற்றத்தை!


வானத்தின் எல்லை
எட்டாதோ என்று
எண்ணிய காலமின்றி
எண்ணிலடங்க செயற்கைக்கோள்
விண்ணிளின்று பறக்குது காண்!


வெள்ளையர்கள் விளையாட்டம்
கிரிக்கெட்டில்
இதுவரை நாம்
இரண்டு முறை பட்டம் வென்றோம்
இளைஞர்களின் சக்தியது!


எத்தனை மொழிகள் இங்கே,
எத்தனை மதங்கள் இங்கே
அத்தனை இருந்தபோதும்
இந்தியன் என்ற சொல்லே
எம்மை உவகை கொள்ளசெய்யும்
என்றில் ஐயமும் உண்டோ சொல்!


இத்தனை கண்டுவிட்டோம்
இனி என்ன செய்யவென்று
சோம்பி இராமல்
இந்தியனே புறப்படு ஒரு
புதிய பாரதம் படைத்திட!
அன்றை நாள் உலகினில்
உன்னாடே வல்லரசு!                                                -சுரேஜமீ

Aug 14, 2011

விலை ஏற்றம்!

கோள்களின் உச்சத்தை 
விஞ்சிவிடுமோ
இந்த மண்ணிலிருந்து
விண்ணுக்கு தாவும்
விலை ஏற்றம்?                                    - சுரேஜமீ

Aug 11, 2011

தங்கம்

ஒரு உலோகம் 
உலகத்தை
ஆட்டிப்படைக்கிறது!                                                      - சுரேஜமீ












கடவுள் வாழ்த்து!

                          
இப்பிறவிதனில் யானிங்கு வந்தபயன் முன்னமே தானறிந்து
எப்பொழுதும் என்சிந்தை விட்டகலாது வழிநடத்தி
திண்ணமுடன் இட்டபணி பிறழாது செய்திடவே
தாயே அருள்வாய் நீ!                                                                              - சுரேஜமீ