Sep 30, 2011

இறையும் மறையும்!

இறையும் மறையும்
மறையும் இறையும்
ஒன்றே!

மனமே நில் 
ஓரிடத்தில்
சற்றே உற்றுநோக்கு 
உன் செயலை!

உள்ளமும் சொல்லும்
செயலும் உண்மை வழியே
சென்று
உலக நலனில்
முடிந்தால்
நீயே
முற்றும் அறிந்த
இறையே
என்று
மறைகள் ஓதும்
நன்றே!

நிரந்தரமில்லா உலகில்
நிதர்சனமற்றுத் திரிந்து
அழுக்காறு , அகங்காரம், ஆசை, 
ஆட்டிப்படைக்கும் பந்தம் பற்றி 
நெறிகள் தவறிய செல்வம் ஈண்டு 
நீதி மாறிய பாதை சென்றால் 
நித்தம் உன்னை கொல்லும்
அதுவும்
இறையே என்று
மறைகள் ஓதும்
நன்றே!!

உருவம் அருவம்
எது நீ ஏகிலும்
இன்றே
செல்வாய் 
அதன் வழி
நன்றே
உணர்வாய்
இறையும் மறையும்
என்று!
நலமே விளையும்
நன்று !                                                                                     - சுரேஜமீ

Sep 24, 2011

சங்கீதம்!

மெல்ல இரவு
தன்னை 
மழித்து
ஆதவன்
வரவு நோக்கிக் 
காத்திருக்கும் 
அதிகாலை வேளையில்,

இனியதொரு
நாள் தொடங்கும்
புட்கள் முதல் 
பூக்கள் வரை
புன்னகைக்கும்
மெல்லிசை 
சங்கீதம்!

மலையினிடை
உருவாகி
மண் நோக்கிப்
பெருக்கெடுத்து 
சமவெளியில்
சாலையிட்டு 
கடல் கலக்கும்
புனல் எழுப்பும் 
புன்னகையும் 
சங்கீதம்!

பெருங்காட்டின் 
மரங்களிடைப் 
பூங்காற்று 
தவழ்ந்து 
வரும் ஓசை
சங்கீதம்!

கார்மேகக் 
கூட்டமது 
போர்மழைக்கு 
முன்னாலே 
வாழ்த்தும் அந்த
மெல்லிய தூறல் 
தரும் ஓசை
சங்கீதம்!

வெங்கதிரோன் 
வெப்பத்தில் 
காய்ந்த மரம்
சருகாகி
நிலமீது விழும் ஓசை
சங்கீதம்!

கருவுற்ற 
தாயின் 
கருப்பையில் 
வளருமந்த சேய்
கொடுக்கும் ஓசை
ஒரு இதமான
சங்கீதம்!

அடிப்படையாய் 
இவையிருந்து 
அடி தொடுத்த 
ராகங்கள்
மடை திறந்த 
வெள்ளம்போல் 
மகிழ்ச்சியது 
தந்ததென்றால் 
மறுப்போரும் 
எவருண்டோ?                                         - சுரேஜமீ

Sep 21, 2011

பெண்ணே நீ ஒரு அதிசயம்!

பெண்ணே 
நீ ஒரு
அதிசயம்!

அறியாத 
வயதில் 
தாயாய்
உன் அன்பில்
நான்
உலகத்தை
பார்த்தேன்!
என் பூமி
உன்னைச்
சுற்றி வந்தது!

அறிந்தும் 
அறியாத 
வயதில்
நீ தொலைவில்
நின்றால்
ரசிக்கத்
தோன்றும்!
அருகில் 
வந்தால்
அணைக்கத்
தோன்றும்!
காதல் என்று
காலம் 
சொன்னது!
காமம் என்று
பருவம் சொன்னது!
ஆனால் 
அது ஒரு
ஈர்ப்பென்றேன்!

அறிந்த வயதில்
அனுபவம்
சொன்னது! 
பெண்ணே 
நீயல்லால்
இப்புவி
என்றோ
ஒரு 
போர்க்களம் 
ஆயிருக்குமென்று!

ஏனெனில்
நீ தானே 
போரைத்
தொடுப்பதும்
போரைத் (bore)
தடுப்பதும்?

பெண்ணே 
நீ ஒரு 
அதிசயம்!

அகிலம் 
இயங்குவதே 
உன் அன்பு
என்னும்
தாய்மை!
பாசம்!
மென்மை!
மேன்மை!
காதல்!
கனிவு!
பண்பு!
பகிர்வு!
பரிவு!
ஆளுமை!
தோழமை!
அகிலம்!
அனைத்தும்!                                                    - சுரேஜமீ

Sep 17, 2011

குவைத் சின்மயா கலை விழா!

காலையில் ஒரு
கலை விழா
கலாச்சாரம் 
வீழாது இருக்க
குவைத் சின்மயா 
குழுவின் 
கவின் விழா!

அரும்பிய
மலர்களின்
அற்புத நடனம்
ஆண்டவனின்
ஆனந்தத் தாண்டவமோ
எனக் காண்பவர்
மனதில் களிப்பினை
உண்டாக்கிய
ஒரு விழா!

சிறார்களின்
சீரிய பங்களிப்பும்
சேவிகாக்களின்
சிந்தனை வடிவும்
பெற்றவர், உற்றவர்,
மற்றவர்களின்
வாழ்த்தும்
குருவின் ஆசியும்
நேர்த்தியாய்
நேரத்தை நகர்த்தின
இனி எப்போது
இதுபோல் ஒரு
விழா வருமென?                                          - சுரேஜமீ

(செப்டம்பர் 16 , 2011 )

Sep 13, 2011

குழந்தை!

நீல வானம்
நிறை மதி
கார்மேகம் 
கடல் அலை
மழைத் தூறல்
மலர்த்தோட்டம்
நீரோடை
நெல் நாற்று
இன்னிசை 
இளங்காலை 
இன்னும் பல
இயற்கை அழகெல்லாம்
கூடி நின்றது 
குழந்தை 
வடிவில்!
குதூகலப்பட்டாள்
ஈன்ற 
அன்னை!     
இதுகாறும் 
இதற்காகத் 
தவமாய்க்
கிடந்து
தாயானவள்!                               -சுரேஜமீ

Sep 9, 2011

ஓவியம்!

சிதறிய
எண்ணங்களை
சீராக்கி ஒரு
புள்ளியில்
குவிக்க
இதயம் தீட்டிய
காவியம்!
விரல்கள்
வரைந்த
ஓவியம்!!                                                - சுரேஜமீ

புன்னகை!

இதயங்களை
இணைக்க
இதழ்கள்
விரிக்கும்
வலை!                                           - சுரேஜமீ

ஓணம்!

மன்னன் 
மகாபலி
தன்
ஆட்சியின்
மதிப்பீடு அறிய
மக்களை நாடி 
வந்த அற்றைத்
திருநாளே 
திருவோணம்!

இந்நாளில்
இனிய வாழ்த்து
பரிமாறி 
புத்தாடை உடுத்தி
பூக்கோலம் இட்டு
பாடி, ஆடிக்
கொண்டாடும் 
இந்த 
அத்தம் பத்தினும்
திருவோணத்
திருவிழா!

மலர்களும்
மனங்களும்
இணைந்து
மெல்லிய 
மனம் வீசும்
தென்றல்
தவழும் 
இந்நாளில்
எங்கும்
மகிழ்ச்சி பரவட்டும்!!                                                          - சுரேஜமீ

இனிய ஓணம் வாழ்த்துக்கள் நண்பர்களே!!

Sep 8, 2011

அரசியல்!

அரசியல் பிழைத்தோர்க்கு
அறமே கூற்றாகும் 
என்றது சிலப்பதிகாரம்!
ஆனால் இன்று 
நடப்பதோ
குற்றம்,கொலை,
கொள்ளை, அபகரிப்பு, 
வஞ்சனை, சூழ்ச்சி,  
அபரிமித செல்வம்,
ஆட்படை , அரசாட்சி 
வேண்டுவோர்க்கு
அரசியலே பிழைப்பாக
இருக்கிறது!

ஊக்கம் தராத
ஆக்கத்தை
அரசியல் தரும்
என்பதை
ஐயன் திருவள்ளுவர்
திருத்தி எழுதியிருப்பார்
இற்றை நாளில்
இருந்தால்!                                                        - சுரேஜமீ

Sep 7, 2011

செங்கொடி!

தன்மகன் போருக்கு
புறமுதுகிட்டான் எனில்
தன் கொங்கை அறுத்த
தம் நாட்டில்
நீதி கிடைக்காதோ
என்று மனம் வெதும்பித்
தன்னை மாய்த்தால்
தன்சமூகம் 
விழிப்புற்று வீதிக்கு வந்து
போராடி மூவருயிர் 
காக்கும் என்று
வீழ்ந்தாள் 
வெந்தணலில்
ஒரு பைங்கொடி
அவள் பெயர் 
செங்கொடி! 

வாழவேண்டிய
வயதில்
வாழ்க்கையைத்
தொலைத்தவள்!

ஏ செங்கொடி!
இனக்கொடி காக்க 
இன்னுயிர் ஈத்த 
நீயும் ஒரு தாயே!                                     - சுரேஜமீ

Sep 6, 2011

நட்பு!

உறவு
உதறிய
உணர்வுகளை
உள்ளன்போடு
உறுதியாய் ஏற்கும் 
நட்பு!

வாழ்க்கையின்
ஏற்ற தாழ்வுகளில்
தாமரையின் வேரும்
நீரும் போல 
ஒட்டியிருக்கும் 
நட்பு!

தயக்கம் சிறிதும்
இன்றி தான் 
நினைத்ததை 
கூறும்போது அதன் 
நிறை குறை அலசும் 
நட்பு!

பள்ளத்தை நோக்கி
ஓடும் நீர்போல
வாழ்க்கை 
பயணத்தில்
தொடரும் 
நட்பு!

இப்படி ஒரு
நட்பு
வாய்த்தால்
வாழ்க்கை
என்றும் வசந்தமே!                             - சுரேஜமீ

Sep 5, 2011

கவிஞன்!

கற்ற தமிழும்
கற்பனையும் 
கலந்த கலவை!

சமூகத்தின்பால்
தான் கொண்ட
உணர்வுகளை
எழுத்தாக்கி
சமூகத்துக்கே
திருப்பிக் கொடுப்பவன்!

செவியில் ஏறாத
சிந்தனையைச் 
சற்றே சிந்தைக்குச்
சேர்ப்பான் தன் 
எழுத்தால்!

தமிழையும்
தமிழனையும்
காலத்தைக்
கடந்து 
பயணிக்க வைப்பவன் 
கவிஞன்!!                                                          - சுரேஜமீ

எழுத்தறிவித்தவன்!

நீரின்றி அமையாது
உலகென்றான்!
எழுத்தறிவித்தவன்
இல்லையெனில்
ஏது
உலகு?

ஐந்து வயதில்
அன்னை தந்தையே
உலகாய் இருந்த 
எனக்கு கிடைத்த
அறிவுலகே
என் ஆசான்!
அன்று ஏற்றிவைத்த
தீபம் இன்றும்
இன்னும் பலப்பல
ஆண்டுகள் 
எரிகிறது என்றால்
நீயே என் இறைவன் அன்றோ?

இருபது வருடங்கள்
என் அறிவுக்கு
இரை கொடுத்த
அத்துணை 
ஆசான்களுக்கும்
அடியேனின்
சிரம்தாழ்ந்த 
வணக்கங்கள் பல!                                                 - சுரேஜமீ


(ஆசிரியர் தினம்)

Sep 3, 2011

காதல்!

காதல் என்பது
காலத்தை 
வீணடித்து 
கற்பனைக்
கோட்டையில் 
வாழ்ந்து 
ஒருவனை நினைத்து 
அடுத்தவனைக் 
கைபிடிப்பதல்ல!

ஒருகணம் 
கண்ணோடு கண்
நோக்கி 
இதயம்
நுழையும்  
உறவு! 
இருந்தும்
இறந்தும் 
அழியாதது!                                                         - சுரேஜமீ

Sep 2, 2011

எதுவும் சாத்தியம்!

கருவறை தொட்டு
கல்லறை வரை
இந்த பெண்மையின்
துயர்தனைத்
தூக்கி எறிந்த்திட்ட
தூய வரலாற்றில்
அவ்வை முதல் அண்மை வரை
செய்த சாதனைப் 
பெண்களின் 
சரித்திரம் சொல்லும்
எதுவும் சாத்தியம்!

பெண்ணடிமைத் துயர் நீக்கி
பெண்ணுயர்வு போதித்த
பாரதியின் கனவுதனை
நெனவாக்கி
நிலையான இடம் பிடித்த
டாக்டர் முத்துலட்சுமி முதல்
கல்பனா சாவ்லா வரை
பெண்கள் நாம் சாதித்த 
சாதனைகள் சொல்லும்
எதுவும் சாத்தியம்!

முடியாது என்று சொல்ல
இனி என்றும் முடியாது
என ஒருவள் 
சிந்தித்தால் 
சிகரம்கூட 
சிறுமணல் குன்றாம்
எண்ணம் சொல் செயல் வழியே
இறுமாப்புக் கொண்டு
எதிர் நீச்ச்சலடித்தால்
எதுவும் சாத்தியம்!

சத்தியம் சொல்கின்றேன்
எதுவும் சாத்தியம் தான் பெண்ணே!
எதிர்காலம் உன்னை
வரலாறாய் வாழ்த்திடுமே!                                   - சுரேஜமீ 

Sep 1, 2011

காஞ்சியின் காலடியே!

காஞ்சியின் காலடியே
உன் காலடி பற்றினோம்
காத்தருள் பரமகுரு!

கலியுகக் கடவுளே
கருணையின் திருவுருவே
தினம் எமை வாழ்த்திட
உன் திருவடி சரணமே!

எமை மறந்து
யாம் செய்த எத்தனை
குற்றங்கள்!
பொருத்தருள் பரமகுரு
உன் பொற்பதம்
பணிந்திட்டோம்!

புவியினில்
இருக்குங்கால் உன்
திருநாமம் தொழுகவே
தினம் எமைப் பணித்திடு
தெய்வமே எம் நாதா!

காலையின் கதிரும் நீ!
மாலையின் மதியும் நீ!
வருடும் காற்றும் நீ!
வாழ்க்கையின் 
வசந்தம் நீ!!

பிறந்திட்ட அனைவரும் 
பெருமகிழ்ச்சி பெற்றிடவே
பெருமகனே அருள்வாயே
பேரருளை நித்தமுமே!

சரணம் எம் குரு! 
சரணம் எம் குரு!!                                           - சுரேஜமீ