Oct 20, 2011

அவசர யுகம்!!

பாதையில்
தொடர்ச்சியாக
வாகனங்கள்!
ஒன்றன் பின் 
ஒன்றாக,
சிறிதும் 
ஓசையின்றி
செல்கின்றன!
வளர்ந்த நாட்டில்!!

அடுத்த 
காட்சியில் 
களம் 
ஒன்றே!
ஆனால் 
காணல் வேறு!!

நாற்திசையும் 
ஓசை!
வாகனங்கள்
ஒன்றோடு
ஒன்று 
மோதும் நிலையில்!
இந்தியாவில்!
இன்னும் நாம்
வளரவில்லையோ?

அவசர கதியில்
செல்கின்றோம்;
அடிபட்ட பின்பே
தெளிகின்றோம்!!                              - சுரேஜமீ

Oct 13, 2011

வானளாவிய கட்டிடங்கள்!

வானளாவிய
கட்டிடங்கள்
வாழாவெட்டியாய்
நிற்கின்றன
குவைதில்!                                                    -  சுரேஜமீ 

Oct 8, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்

கணினி உலகின்
களத்தை 
தன்னகத்தே
திருப்பி நம்
எல்லோரையும்
ஆப்பிள் என்ற
ஒரு சொல்லால்
ஆட்கொண்டவன்
இன்று ஆளாத்
துயரத்தில்
ஆழ்த்திவிட்டுச்
சென்றுவிட்டான்!

தோல்வியில் 
தொடங்கி
வெற்றியைத்
தொட்டவனின்
வாழ்க்கை
கடைசியில்
தோற்றது
மரணத்திடம்!
ஐ உலகமோ
இன்று 
ஐயோ உலகமானது!
சரித்திரத்தை
மாற்றியவனோ
ஒரு
சரித்திரம் ஆனான்!

ஐ பாடு தொடங்கி
ஐ போன் வரை
அலறும்  சத்தம்
அகிலம் கேட்கிறது!
உருவாக்கிய நீயோ
ஆழ்ந்து உறங்கிவிட்டாய்!
மீண்டு வா!
மீள் சரித்திரமாக!!                                        - சுரேஜமீ

Oct 7, 2011

பிறந்த வீடு போகும் பெண்!

காலை முதல்
இரவு வரை
காபி,
உணவு,
உடை,
உறக்கம்
என்று
தேடித் தேடி
உபசரித்த
எனக்கு,
என்னைத் தேடி
எல்லாம் வந்தது
தாய் வீட்டில்;
சற்றே தலை
சாய்த்தேன்
அவள் மடியில்!                            - சுரேஜமீ

Oct 2, 2011

மலர்ந்த காதல்!

வானும்
மண்ணும்
நோக்கின தன்
மலர்ந்த 
காதல் சொல்ல!
வானம் மெல்ல
அன்பை
மழையாய்ப்
பொழிந்தது!
மண்ணும் சற்றே 
நாணிப் பச்சைப்
போர்வை கொண்டு
தன்னை 
மறைத்தது!
மகிழ்ச்சி 
வானுக்கும்
மண்ணுக்கும் 
மட்டுமல்ல...
பூகோலமெங்கும்....
பயிர்ப்பன, 
பறப்பன, 
ஊர்வன, 
நடப்பன,
அனைத்தும் 
மகிழ்ந்தன.....                        - சுரேஜமீ

Oct 1, 2011

மகத்துவம்

ஜனனத்தின் 
ரகசியம் 
தெரிந்த
உனக்கு
மரணத்தின் 
மகத்துவம்
தெரியாதெதேனோ?                          - சுரேஜமீ