May 27, 2012

ரூபாயின் வீழ்ச்சி!

ரூபாயின் வீழ்ச்சி!

சராசரி இந்தியனின்
சிந்தையில் எழும் 
வினா இது!
ரூபாயின் மதிப்பு 
வீழ்ச்சி என்றால் 
என்ன?
 
 
ஒருரூபாய் கொடுத்து 
ஒரு பொருளை 
வாங்கும்பொழுது,
இன்று 
ஒரு ரூபாய் பத்து பைசா 
கொடுக்க நேர்ந்தால் 
அது தான் 
ரூபாயின் வீழ்ச்சி!
இதையே சற்று மாற்றிக் 
கூறினால், 
ரூபாயின் வாங்கும் 
சக்தி குறைகிறது  
என அர்த்தம்!

குப்பனும் சுப்பனும் 
தன் வீட்டு உணவுகளை 
தானே பயிரிட்டு 
தனக்கு மிஞ்சியதை 
சந்தைக்கு கொண்டு விற்று 
சந்ததிக்குச் சேர்த்ததுபோய்,

"சந்தைப் பொருளாதாரம் "
வந்த நாள் முதலாய் 
சந்திக்கு வந்ததுதான் 
சிந்திக்க வைத்த இந்த 
நாணயத்தின் வீழ்ச்சி!

எப்பொழுது நாம் 
தன்னிறைவு அடைந்து, 
மிஞ்சியதை, 
ஏற்றுமதிசெய்து, 
வேண்டியதை 
இறக்குமதி செய்யும்,
பண்டமாற்று பரிவர்த்தனையில்,
ஏற்றுமதி விஞ்சும்போழுதுதான் 
'சந்தை பொருளாதாரம்' 
சந்ததியைக் காக்கும் 
எனும் சாமானிய 
இந்தியனின் 
சராசரி கணக்கு கூட 
சர்க்காருக்கு தெரியவில்லை!

பெட்ரோல் டீஸல் தான் 
பேரிழப்பு வீழ்ச்சிக்கு 
என்று சொல்லும் 
அரசே,
பட்டினி சாவு கண்டு 
"பசுமைப் புரட்சிக்கு "
வித்திட்ட முன்னோர்கள் 
தொலைநோக்குப் 
பார்வை எங்கே?

"ஸ்வதேசியாய்"  இரு 
"விதேஷி" வேண்டாம் என்ற
விவேகப் பார்வையிலே 
வளர்ந்த இந்த 
"நாணயத்தை"
"நா" நயத்தால் 
மதி மயக்கி 
கூறு போட்ட 
அறிவிலிகாள்!

"விவசாய"ம் சார்ந்து 
வளர் தொழில்களை 
ஊக்குவித்து;
"உற்பத்தி"யைப் பெருக்கி,
ஊர் விட்டு ஊரு போகும் 
சரக்கினையே ஓரிடத்தில் 
கிடத்திடவே,
"கிட்டங்கு ஏற்படுத்தி "
தேவைக்கு போக மீதி 
ஏற்றுமதி செய்திடவே 
எளிதாய் வாயில் 
அமைத்தல்;
"மூலதனப் பொருள்களை 
முற்றிலுமாய் உற்பத்தி" 
செய்ய தேவையான 
அத்துனையும்
அளவில்லாமல் 
கிடைத்திடவே
வழி செய்தால்;
"நடப்பு கணக்கு" (Current Account)
என்றும் உபரியாகி (surplus)
அபரிமித வருவாயும் 
அமுதசுரபியாய் வருமே!
ஏற்றம்தனைத் தந்திடுமே,
மாற்றமது வந்திடுமே!!

புத்திசாலி என்று நாமே 
எத்திசையும் 
செல்லாமல் 
ஏர் பிடித்து உழுது, 
ஏற்றமது காண்போமே;

தொழிற்சாலை பல கண்டு 
"மூலதனப் பொருள்களெல்லாம் 
சாலச் சிறந்தது" எங்கள் 
நாட்டில் எனும் 
நாள் வருமேயானால்;

"ரூபாய்" 
அந்நியனையும் 
ஈர்க்கும்! 
அந்நாள் 
நம் மதிப்பெல்லாம் 
உயரும்;
விண்ணெட்டும் விலைவாசி 
மண்ணோடு மாண்டுபோகும்!

திக்கெட்டும் எங்கள் 
மதி கேட்டு ஓடி வரும் 
மானுட சாதிஎல்லாம்!

இந்தியனால் வந்தால் 
அது "வளர்ச்சி"
அன்னியனால் வந்தால் 
அது "வீழ்ச்சி"!
எது வேண்டும் நீ யோசி!
இல்லையேல் நாளும் யாசி!                                            - சுரேஜமீ!