Oct 30, 2012

லீனா மணிமேகலை

காற்றும் ஒளியும்
கண்கவர் வானும்
காதில் சொன்னது;
கலையும், கற்பனையும்;
கலந்த கலவை
மேகலை எனும் உருவில்
மண்ணில் உள்ளதென்று!
சற்றே யாரென சிந்தை
செலுத்தி; சிலவரி படித்தேன்;
உன் முகவரி தேடினேன்;
உன்னைப் போல் ஒவ்வொரு
பெண்ணும்; தெளிந்த நீரோடையாய்
திடமான சிந்தனையுடன்
தீர்க்கமான வழி பற்றினால்;
திண்ணமாய்ச் சொல்கிறேன்;
பாரதியும்; பெரியாரும்
இறந்து பிறக்கத் தேவையில்லை!
பிறந்து இறந்த பயன் பெற்றார்!
காமத்தை திணிக்கும்
காட்டு மிராண்டிகளுக்கிடையே
காகிதப் பூவின் மென்மையும்;
கள்ளிப் பூவின் தன்மையும்;
ரோசாவின் அழகையும்
ரோமின் உறுதியும்,
கொண்ட உன்போல்
பெண்களால்தான்
புது யுகம் படைக்கிறோம் !
தமிழே; தமிழச்சியே!
நீ வாழ்க; வளர்க!                             

Oct 15, 2012

நவராத்திரி

நவராத்திரி 

நங்கையர்கள் நாவினிலே, 
நாமகளும் குடிகொண்டு, 
நவ நாள்கள் தேவிதனை ,
நாளெல்லாம் பூஜித்து; 

முதல் மூன்று நாட்களிலே 
மூவுலகைக் காப்பவளாம் 
துர்கையை வணங்கியே 
இச்சையைப் பெற்றிடுவர்!

அடுத்த மூன்று நாட்களிலே 
அரங்கனின் அருகிருக்கும் 
இலக்குமியை வணங்கி நாமே 
இன்பமெல்லாம் வேண்டிடுவர்!

கடைசி மூன்று நாட்களிலே 
காரிருளைப் போக்கிடுவாள் 
கலைமகளை வணங்கிடுவர்;
கற்ற கல்வி பெருகிடவே!

மனமாசு அகற்றிவிடும் 
மகிசாசுர மர்தினி சுலோகம் 
வேண்டுவன தந்திடுமே 
வெற்றிதனை உண்டாக்கும் 
லலிதா நவரத்னா மாலை 
இலட்சியத்தை அடைந்திடவே 
லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் 
லஹரியுடன்,அபிராமி அந்தாதி 
நித்தம் சொல்லி ஒரு மனதாய் 
நவராத்திரி நாட்களிலே 
நன்மையெல்லாம் பெற்றிடுவீர்!! 

மலைமகளும்; அலைமகளும் 
கலைமகளும் துணை நிற்பாள்;
துன்பமது வாராது;
இன்பமது நிலைத்திடுமே!!!

இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!!!!!!!!!! - சுரேஜமீ 

(Wish you all a very HAAPY NAVARHTIRI!!!!)






Oct 11, 2012

ஆயுதத் தமிழ்!!!!!

அகத்தியன் வளர்த்த தமிழ்; 
அகிலம் பூத்த தமிழ்; 
அமுதம் படைக்கும் தமிழ்;
அறுசுவை உணர்த்தும் தமிழ்;
அகமும் புறமும் தமிழ்;
அழகு மொழியும் தமிழ்!

அவனியில் கற்றார்க்கு, 
அறிவைப் பெருக்கும் தமிழ்;
ஆற்றலை வகுக்கும் தமிழ்;
ஆன்றோர் மெச்சும் தமிழ் ;
இலக்கணம் பெற்ற தமிழ்;
இலக்கியச்  சோலை தமிழ்;
ஈடில்லா மொழி தமிழ்;
ஈகை போற்றும் தமிழ்;
உலகின் மூத்த தமிழ்;
உறவைப் பேணும் தமிழ்;
ஊடல் மொழியும் தமிழ்;
ஊட்டும் பணியும் தமிழ்;
எங்கும் எதிலும் தமிழ்;
எங்கள் வளமும் தமிழ்;
ஏட்டில்  பதித்த தமிழ்;
ஏற்றம் கண்ட தமிழ்;
ஐயம் அற்ற தமிழ்;
ஐம்புலன் அடக்கும் தமிழ்;
ஒற்றுமை வேண்டும் தமிழ்;
ஒளியை பரப்பும் தமிழ்;
ஓசையின் இனிமை தமிழ்;
ஓங்கியே ஒலிக்கும் தமிழ்;
ஔவை  நுகர்ந்த தமிழ்;
ஒளவையின் சிறந்த தமிழ்;
ஃ எனும் எழுத்தும் தமிழ்;

ஃ எனும் ஆயுதத் தமிழ்!!!!!!              - சுரேஜமீ

விநாயக சதுர்த்தி

கஜமுகனை நினை மனமே
தினம் தினம் குதூகலமே;
ஒருமுறை அவன் நாமம் சொன்னால்
உருவாகும் அற்புதமே!

நல்வினை நல்கிடுவான்
நாளும் அவன் அடிபணிந்தால்;
நாமகள் அருள்புரிவாள்
விநாயகன் துணை நின்றால்!

ஞானத்தைக் கொடுப்பவனை,
வரும் இடர் தவிர்ப்பவனை,
முப்பொழுதும் உணர்ந்தவனை,
முழுவதும் நம்பியவனை,
முன்னின்று காத்திடுவான்
முக்கண்ணன் புத்திரனே!

வேண்டுவது தந்திடுவான்
வேலவனின் சோதரனே
முக்கனியும்; மோதகமும்;
முப்பாலும் கொண்ட தமிழால்
அர்ச்சித்து மகிழ்வோரை
அருகிருந்து காப்பவனே!

தேய்பிறை சதுர்த்தியிலே,
சந்தி வரும் வேளையிலே,
பூஜிக்கும் அன்பருக்கே,
வேண்டுவன தந்திடுவான்!
மேன்மை பெறச் செய்திடுவான்;

சிந்தையிலே கணநாதன் 
மெல்ல வந்து அமர்ந்துவிட்டால்;
உள்ளமது தெளிந்திடுமே,
ஊக்கமது பிறந்திடுமே!!
சொல்ல ஒரு வார்த்தை ஏது?
சொக்கநாதன் மைந்தனே!

கஜமுகனை நினை மனமே
தினம் தினம் குதூகலமே;
ஒருமுறை அவன் நாமம் சொன்னால்
உருவாகும் அற்புதமே!                                                              - சுரேஜமீ 

(Sep 19, 2012 - Vinayaga Chathurthi)