Nov 30, 2012

புதுக்குறள் - 5

சுருக்கின் மின்சாரம் இயற்க்கை ஒளிபற்றின் 
பெருக்கின் ஆற்றல் உயிர்க்கு.
     


விளக்கம்:
மின்சாரத்தை குறைவாகவும், இயற்கையான ஒளியை மிகுதியாகவும் பயன்படுத்தி, ஓசோனில் மாசு படிவதைத் தவிர்த்தால், உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான சக்தியைப்  பெருக்கலாம்.

Nov 29, 2012

புதுக்குறள் - 4

கணினியின் துணைநன்கு அறியும் மாந்தர்க்கு 
கற்றல் எளிதென்று சொல்.                                              

விளக்கம்:
கணினியை நற் செயல்களுக்கு; அறிவை வளர்ப்பதற்கு; ஆற்றலைப் பெருக்குவதற்கு பயன்படுத்தி பழகினோமேயானால், நாம் கற்பதற்கு அதைப் போல உற்ற துணை வேறெதுவும் இல்லை.  கற்பது ஒரு இலகுவான செயலாகும்.

Nov 28, 2012

புதுக்குறள் - 3


புதிதாகச் சிந்தித்தேன்...திருக்குறள் வடிவில்;

புற்றின் வகையறிந்து புறந்தள்ளின் வாழ்க்கை
தொற்றும் நோயும் வரா.                                         
     


விளக்கம்:

புற்று நோயின் அறிகுறிகளை, காரணிகளை ஆராய்ந்து, அவற்றை நாம் புறம் தள்ளி வைப்போமேயானால், நம்முடைய வாழ்க்கையில் அந்நோய் வாராமல் நம்மைக் காத்துகொள்ளலாம்.

Nov 27, 2012

கார்த்திகை தீபம்...

கார்த்திகையின் வரவு கண்டு
கன்னியர்கள் மகிழ்ந்திடுவர்
தீபங்களை ஏற்றிடுவர்
திருநாமம் சொல்லிடுவர் .

துணை வருவோன் எவனென்று
தினம் மனமே அலைபாய ,
பெற்றோரும் நாள் பார்த்து
பெருமையுடன் தேடிடுவார் ;
உற்றதொரு காளையரை
மற்றுமொரு மகனாக ,
மாலை மாற்றிப் பெற்றிடுவர் ;
காலமெல்லாம் போற்றிடுவர்!

கார்த்திகையை வரவேற்போம்;
கன்னியர்களுடன் நாமும்,
பெற்றாரும்,உற்றாரும்,
உற்சாகமாய் வாழ வேண்டி
ஏற்றுமந்த தீபம் தனில் ,
எண்ணமெல்லாம் ஈடேற;
வாழ்த்துக்கள் சொல்லிடுவோம்
வளமுடன் வாழ்க என்று!

Nov 26, 2012

புதுக்குறள் - 2

ஊடகங்களின் உறவில் உணர்ச்சி வித்திட்டால் 
ஊனுமறிவும் சேர்ந்து கெடும்!

விளக்கம்:

நாம் அன்றாடம் தொடர்பில் இருக்கக் கூடிய ஊடகங்களான காணூடகம்(Television; internet,etc.,); கையூடகம்(Phone, mobile, etc.,); செவியூடகம்(radio); போன்ற செய்தித் தொடர்பு ஊடகங்கள், நம் உணர்சிகளை மிகுதிப் படுத்தினால், நம் உடலும், அறிவும் சேர்ந்து கெடும். ஆதலால், நாம் அறிவின் பால் செயல் பட்டு, நம்மைப்  பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சுவாமியே.....சரணமையப்பா!

ஐயப்பா என்று சொல்லு மனமே
ஐயன் வந்து காத்திடுவான் தினமே
சரணகோஷம் பாடிடுவாய் மனமே
சட்டெனவே வந்திடுவான் தினமே

கார்த்திகையில் மாலையிடு மனமே
காலை மாலை பூஜையிடு தினமே
காரிருளும் போய்விடுமே மனமே
காரியத்தை முடித்து வைப்பான் தினமே

இருமுடியைக் கட்டிடுவோம் மனமே
மறுமுனையில் அவனிருப்பான் தினமே
புறப்படுவோம் சரணம் சொல்லி மனமே
புண்ணியங்கள் சேர்த்திடுவோம் தினமே

பக்தர்களை நாடி வரான் மனமே
பாயும் புலியேறி வரான் தினமே
பம்பையிலே நீந்தி வரான் மனமே
பாதையினைக் காட்ட வரான் தினமே

அழுதாமலை ஏறிவிடு மனமே
அல்லல்களும் தொலைந்திடுமே தினமே
கரிமலையைத் தாண்டிவிடு மனமே
கவலைகளும் பறந்திடுமே தினமே

பதினெட்டு படியேறு மனமே
பதினாறும் பெற்று வாழு தினமே
படிபூஜை செய்திட்டால் மனமே
பாவமெல்லாம் பனியாகும் தினமே

ஐயனைக் கண்டுவிட்டால் மனமே
அகமெல்லாம் மலர்ந்திடுமே தினமே
அபிஷேகம் செய்துவிட்டால் மனமே
ஐயனருள் துணை நிற்கும் தினமே

ஐயப்பா என்று சொல்லு மனமே
ஐயன் வந்து காத்திடுவான் தினமே
சரணகோஷம் பாடிடுவாய் மனமே
சந்ததிகளைக் காத்திடுவான் தினமே

புதுக்குறள் - 1

புதிதாகச் சிந்தித்தேன்...திருக்குறள் வடிவில்;

புரிதலும் கொடுத்தலும் புரிந்தன செய்தலும் 
புவியினில் அமைதிக்கு வழி!                                                        - சுரேஜமீ .


விளக்கம்:
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும்; விட்டுக் கொடுத்து வாழ்தலும், புரிந்த வண்ணம் செயலாற்றுதலும், இந்த உலகத்தில் அமைதியாகவும்; மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வழியாகும்.

Nov 25, 2012

காற்று

மெல்ல வருடும் காற்று
மேனியில் சற்றே நின்று
மேதினியில் நடந்தவற்றைக்
மெதுவாக எடுத்துச் சொன்னது...

அமெரிக்கா  தொடங்கி
ஆஸ்திரேலியா வரை
நான் கடந்து வந்த பாதையில்;
நலிந்தும்; மெலிந்தும்;
பொழிந்தும்; புதைந்தும்;
மறைந்தும்; மீண்டும்;
வந்தேன்....

நறுமணங்களும்;
நச்சுக்களும்;
அடர்ந்த கானகங்களும்;
அரவமற்ற நிலங்களும்;
ஆற்றின் படுகைகளும்;
சேற்றின் செழுமைகளும்;
போற்றி நான்
வந்தேன்...

வாடையாக;
வசந்தமாக;
தென்றலாக;
புயலாக;
தீயாக
சூறாவளியாகச்
சுற்றி வந்தேன்.....

சிலர் என்னால்
நோயுற்றனர்;
பலர் என்னால்
பயனுற்றனர்;
இயற்க்கை என்னை
இயல்பாகத்தான்
இயக்கியது....ஆனால்;
செயற்கை என்னை
சிதறடிக்கச் செய்து;
பலரை பதறடிக்கச்
செய்து விட்டது....

ஆதலால்; கேள்;
அவனியில் நான்

அருமருந்தாய் பரவி வர;
ஆற்றுதல் என்னவென்று,
இதமாகச் சிந்தித்து,
ஈதலின் நன்றாம்; என்
உற்ற துணை உனக்கு,

ஊற்றுப் பெருக்கெடுக்கும்
எந்த இடத்திலும், நான்
ஏற்றம் பெரும் வகையில்;
ஐந்தைந்தாய் மரம் நட்டு;

ஒட்டுமொத்த உலகத்திலும்
ஓசோன் படலத்தை
ஒழுங்காகப் பாதுகாக்கும்
ஒப்பற்ற சேவைக்கு;
என்னையும் நீ தயார்படுத்து;

நோயில்லா வாழ்வுக்கு
நான் உனக்கு உறுதி தர....
செய்வாயா இதையென்று
செவிதனிலே சொல்லிவிட்டு

சென்றதந்த தென்றலும் தான்........

Nov 23, 2012

தடம் பதிக்கிறது

இதயம் சொன்னது 
எண்ணத்தை
உதிர்த்த
உதடுகளிடம்;
நீ தடுமாறுவது
என்னுள்
தடம் பதிக்கிறது என்று!

Nov 21, 2012

"இந்தியனாக" இரு!

இந்துவாக இரு;
இஸ்லாமியராக இரு;
கிறிஸ்துவராக இரு;
ஜைனராக இரு;
சீக்கியராக இரு;
பௌத்தராக இரு;
ஆனால்,
இந்தியாவில்
"இந்தியனாக"
இருக்கக்
கற்றுக்கொள்!

இந்திய மண்ணில்
தீவிரவாதம் செய்யும்
எவனையும்
மதத்தைத் தாண்டி
மனிதனாக எதிர்க்கக்
கற்றுக்கொள்!!

நாடா? மதமா?
என்றால்;
உன் மதத்தைப்
பின்னால் வைத்து;
நாட்டை
முன்னால் வை
க்கக்
கற்றுக்கொள்!!!

வாழ்க பாரதம்! வளர்க இந்திய தேசம்!! ஓங்குக இந்தியன் புகழ்!!!

Nov 19, 2012

ஐ.நா.

இன்றைய நிலையில்

ஐ.நா.
வெறும்
ஐயும்(eye)
நாவும்(tongue )
தான்.....

லே...லே...லே...லே...

சண்முகா என்று சொன்னாலே
சந்தோஷம் தங்கும் வீட்டிலே
சஷ்டியில் விரதம் இருந்தாலே
சத்தியம் வருவான் முன்னாலே

நிந்தனை எவரும் செய்தாலே
நித்தமும் வருந்தித் தவறாலே
பக்தனாய் குமரன் பின்னாலே
பித்தனாய் போவார் முன்னாலே

கந்தனை நம்பி வந்தாலே
சிந்தனை தெளியும் தன்னாலே
எண்திசையும் எதிரிகளில்லே
ஏற்றம் வரும் கண்கள் முன்னாலே

கார்த்திகைப் பெண்கள் அருளாலே
கார்த்திகேயன் வந்தான் பிறப்பாலே
சூரனை வதைத்தான் வேலாலே
சேவலைக் கொண்டான் கொடியாலே

முருகனை வணங்கிச் சென்றாலே
முத்தமிழ் வாழ்த்தும் அவனாலே
அகத்தியன் வளர்த்த தமிழாலே
அர்ச்சனை செய்வோம் முன்னாலே

Nov 13, 2012

வண்ணத்தை மிஞ்சும் வர்ணங்கள்!

குருதியில்
பச்சை உண்டோ?
கருப்பு உண்டோ?
நீலம் உண்டோ?
ஆனால், உனக்கு மட்டும்
ஏதடா
வண்ணத்தை மிஞ்சும்
வர்ணங்கள்?

எவனோ அன்று
பிரித்தாளச் செய்த
சூழ்ச்சியை;
இன்றும் நீ
பிடித்துக் கொண்டு
இருக்கிறாயே
மூடனே!

உன் குருதியி
ன் நிறம்
"ஒன்று" என சொல்லிய
உன் அறிவு;
உனக்குள் எப்படி
விண்வெளி இடைவெளியில்
இப்படி வர்ணத்தை விதைத்தது?

நடந்த தீயவைகளை, 
தலைமுறை; தலைமுறையாக
எடுத்துச் செல்வதைத் தவிர்க்க;

நானிலத்தில் "நாம்" 

எல்லோரும் சமமென்பதற்கு!

Nov 12, 2012

தனிமை

வறுமையினும் கொடிது ;
பகைமையினும் கொடிது ;
நோயினினும் கொடிது ;
வாளினும் வலியது !
வாழ்க்கையை வேரோடும்
வேரடி மண்ணோடும்
அறுத்துவிடும் நஞ்
சு!

சுட்டெரிக்கும் சூரியனே,
சுடர் மறைக்கும் ஒரு நாள்
சேர்ந்திருக்கத் துடிக்கும்!
மதியோனும்; புவியும்
கைகொடுக்கும் அந்நாள்;
கிரஹனம்  எனும் பொன்னாள்!
இதிலிருந்து அறிவோம் நாம்
தனிமை எனும் நஞ்சை!!                               


Nov 11, 2012

பத்ம விபூஷன் திரு. நாராயண் மூர்த்தி அவர்களின் உரை:

பத்ம விபூஷன் திரு. நாராயண் மூர்த்தி அவர்களின் உரை:

மாதத்தில் இருபத்திரெண்டு நாட்கள்;
அயல் நாட்டில்;
எட்டு நாட்கள் என் தாய் நாட்டில்;
இதுதான் எனது இன்றைய நிலை!

இத்தகைய சூழலில்
இந்த குவைத் கன்னட கூட்டா
அமைப்பின் நிகழ்ச்சியில்
"தொழில் முனைவோர்"
என்ற தலைப்பில் பேச
அழைத்திருக்கிறார்கள்!

நண்பர்களே; குறிப்பாக இளையோரே;
தொழில் முனைவோர் எப்படி
ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும்
என்பதை நாம் உணரவேண்டும்!
தனி நபர் வருமானத்தில்;
உலகத்தில் முதல் பத்து இடத்தில்
இருக்கும் குவைத்துக்கும் கூட
இது பொருந்தும்!!

தனது "முயற்சியை",
குறிக்கோளை, தகுந்த முறையில்
செல்வம் தரும் வகையில் மாற்றி,
வேலை வாய்ப்பை உருவாக்கி,
ஏழ்மையை விரட்டுவோமேயானால்;
அதுதான், நம் வெற்றியின் அடையாளம்!

"முடியாதது" எதுவோ; அதை
"முடியும்" என மாற்றுவதே
உங்களின் முயற்சியின்
இலட்சியமாக இருக்க வேண்டும்!

ஒரு "முயற்சி" வெற்றி பெற
அடிப்படைத் தேவைகள் என்ன?

1.  நீங்கள் கூறுவது எளிமையாக இருத்தல் அவசியம்;
    கட்டுப்பாடுகள் அற்ற, தெளிவான வார்த்தைகளை
    உபயோகிக்க வேண்டும்;

     உங்கள் முயற்சி ஒரு நிறுவனத்தின்
2.  உற்பத்தி செலவை குறைப்பதாகவோ; 

3.  உற்பத்தி சுழற்சியின் நேரத்தை குறைப்பதாகவோ;

4.  சந்தையைப் பெருக்குவதாகவோ;

5.  வாடிக்கையாளரை கவருவதாகவோ;

இருத்தல் அவசியம்! 

இவை நான்குமோ;
இதில் ஏதேனும் ஒன்றோ
உங்கள் முயற்சியில்
இருந்தால்; நிச்சயம் ஒருநாள்
உங்கள் இலட்சியம் வெற்றியடையும்!

உலகில் தொண்ணூற்று ஒன்பது
சதவிகிதத்தினர்; மற்றவர்
முயற்சியை; மெருகூட்டி
வெற்றியடைவதால்; கால
ஓட்டத்தில்; அவர்களால்
நிலைக்க இயலவில்லை!

தன்னுடைய முயற்சி
வெற்றியடைந்ததால்;
General Motors; Microsoft;
Apple; Fed ex போன்ற
நிறுவனங்கள் நிலைத்து
நிற்கின்றன!

உலகின் மாற்றங்களை
உன்னிப்பாய் கவனியுங்கள்;
உலக அளவில் ஏற்பட்ட
நான்கு மாற்றங்கள் தான்;
நான் அன்று வெறும்
250 டாலரில் தொடங்கிய
நிறுவனம் இன்று
26 பில்லியன் டாலர்
நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது!

முதல் முயற்சி
தோல்வியில் முடிந்தால்
மூலையில் உட்கார்ந்து விடாமல்;
உங்கள் மூளையைத் தீட்டி
காரணம் அறியுங்கள்!

ஒன்று; நீங்கள் உங்கள் முயற்சியை
காலம் தாழ்த்த நேரலாம்!
இல்லையெனில்,
உங்களுக்கான சந்தை
வேறு நாட்டில் இருக்கலாம்!

வெற்றிக்கு இன்றியமையாத
அடுத்த தேவை;

தகுந்த நிபுணர்களை
தன்னகத்தே கொள்ளுதல்;
நிதி; மேலாண்மை;
உற்பத்தி; மனித வளம்
என்று ஒவ்வொரு துறைக்கும்;
ஏற்றவாறு; ஒருமித்த
கருத்துள்ள; நாளைய
இலட்சியத்திற்காக
இன்று தியாகம் செய்யத்
தயாரான; தகுதியான
நபர்களை உங்களுடன்
வைத்திருத்தல் அவசியம்!

இவை அனைத்தும்
இருந்தாலும்; நம்பத் தகுந்த
தலைமையாக தாங்கள் 
இருத்தல் அவசியம்!

தலைமையைப்  பற்றி
ஒன்று சொல்ல விளைகிறேன்!
அமெரிக்காவில்; பெருந்தொழில்
அதிபர்களிடையே;
நான் உரையாடும்போது
என்னிடம் சிறந்த தலைமைப் பண்பைப்
பற்றி பேசச் சொன்னார்கள்;

நான் சொன்னேன்;
நான் அறையில் நுழையும்போது;
என்னால்
ஒரு முகம் மலர்ந்த ஒரு
மகிழ்ச்சியை;
என்னை நம்பி வேலை
செய்யும் சக தொழிலாளர்களிடம்
ஏற்படுத்த முடிந்தால்;

அவர்களுக்கு என்னால்
வாழ்க்கைக்குத் தேவையான
உபரி வருமானத்தைக்
கொடுக்க முடிந்தால்;

நான் ஒரு நல்ல தலைமையாளன்!!
என்று.
 
இவை இருந்து விட்டால்;
இன்றைய காலத்தில்
உங்கள் முயற்சியை
செயல் படுத்த பணம்
உங்களை நாடி வரும்!


ஆதலால்; இளையோரே
தொழில் முனைவோரே;
இன்னல்களைப் பொருட்படுத்தாது
இலட்சியங்களை வென்றெடுக்க
உங்களுக்கு தேவை;

உங்கள் முயற்சி எதாவது ஒரு
மாற்றத்திற்கு வித்திட வேண்டும்!
அதற்கான சந்தை மற்றும் சகாக்கள்;
நல்ல தலைமைப் பண்பு;
உங்களிடம் இருத்தல் வேண்டும்!

வாருங்கள்; வெற்றி நம்
பக்கத்தில்!!!!!!
வரலாறு எழுதும் நம்
பக்கத்தை!!!!!

ஜெய் ஹிந்த்!!!

(Padma Vibooshan Sri.Narayan Murthy's speech at a function organized by Kuwait Kannada Koota on 9th November, 2012)

இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

தீபம் ஒளிவிட
தீயவை விலகி
நல்லவை நாடி
எண்ணை நீராடி
கங்கையை இருப்பிடத்திற்கே
கொணர்ந்து,
குளியல் செய்து;
புத்தாடை உடுத்தி,
பகவானை வேண்டி,
பட்டாசு வெடித்து
வாழ்த்துக்கள் பரிமாறி,
வழக்கமாகக் கொண்டாடும்
இந்த நரகாசுரன் அழிந்த நாளில்;

இனியும், நம் முன் இருக்கும்,
இன்ன பல அசுரர்களாம்,
அறிவின் எதிரிகள்;
உணர்ச்சியின் உறவுகள்;

அகங்காரம்; ஆளுமை; கர்வம்;
தன் முனைப்பு; பொறாமை;
எதேச்சாதிகாரம்; எள்ளி நகையாடல்;
புறம் பேசுதல்; புண் படுத்தல்;
பெற்றோரை நிந்தித்தல்;
போன்ற அசுரர்களைக் கொன்று;

புதியதோர் உலகம் செய்து;
அகமன் மலர்ந்து;
முகமன் கூறி;
பெற்றார்; உற்றார்; ஊரார்
உலகார் மெச்சும் வகையில்;
உணர்வுகளை;
அறிவின் அடிமைகளாக்கி
சகமனிதன் வலி கண்டால்;
சகதோள்கள் கொடுத்து
சன்மார்க்க நெறி பற்றி
சகோதரத்துவம்  பேணி
இன்னுமொரு தீபாவளிக்கு
நாம் நடைபோடுவோம்
என்று உறுதியெடுப்போம்!!!!!!!!

இனிய நல்  தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

Nov 7, 2012

தமிழா ஏனிந்த தலைகுனிவு?

தென்னகம் பற்றி எரிய
யார் காரணமாயினும்,
"நாம் தமிழர்" எனும்
உணர்வற்று;
சா தீயை வைத்துச்
சடலமாக்கி விட்டனரே
சில அப்பாவி உயிர்களை!
 

உனக்கு வலை விரித்து
உன்னுள் குளிர்காய
நினைக்கும் சதியினை
அறியாயோ?
அவ்வை அன்றே சொன்னாளே
மேதினில் இட்டார் பெரியோர்;
இடாதார் இழிகுலத்தோர் என்று!

சரித்திரம் சொல்கிறது,
சக மனிதன் வலி அறியா
எவனும் தமிழனாக
இருக்கத் தகுதி அற்றவன்!

இந்நிலையில் நீ எப்படி
ஈழத்து சொந்தங்களை
காப்பாற்றுவாய்?

போதும் நிறுத்து;
உன் குருதி
இனியும்
வீணாகக் கூடாது!
சதியை முறியடித்து
சா தீயை வென்றெடு!
நாளைய சரித்திரம்
நமதே!!!!

Nov 6, 2012

விநாயகர் கவசம்

சதுர்த்தியில் மலர்ந்த
சண்முக சோதரா
சதுர்மறை போற்றும்
சிவனுமை  பாலா
தினம்உனைப் பாடி
துதிசெய்து நாளும்
உனதருள் வேண்டி
நிதமுனைப் பணிவோம்.

முன்வினை களைவாய்
மூஷிக வாகனா
என்மனம் இருப்பாய்
ஈசன் புதல்வா
சிந்தையில் கலப்பாய்
சித்தி விநாயகா
உன்பதம் சரணம்
உமையவள் மைந்தா.

ஒன்றுமே அறியேன்
உலகினில் பிறந்தேன்
உன்னடி சேர்ந்தேன்
ஒரு வரம் தருவாய்
நன்று மற்றன்று
நவிலா வண்ணம்
நந்தன விநாயகா
நலமது அருள்வாய்.

இருசெவி என்றும்
இன்பமே உய்க்கும்
நற்செய்தி நாளும்
நயம்படக் கேட்க
இருவிழி காணும்
ஒரு முகக்காட்சி
மங்கல மூர்த்தி
நினதருள் சாட்சி.

நாமகள் நாவினில்
அமர்ந்து அடியேன்
சொல்பொருள் யாவும்
நலமென விளைய
நுகரும் மணமே
நறுமணமாகி,என்
மெய்யது காப்பாய்
கஜமுக கணபதி.

ஐம்புலன் தன்னை
ஐங்கரன் காப்பான்
தினம் ஒருதடவை
மனமது ஒன்றிப்
பாடும் பக்தர்கள்
பாரினில் நற்கதி
பெறுவார் சத்தியம்
பால கணபதியருளால்.

அல்லல்கள் ஓடும்
நல்லவை நாடும்
நவகோள் அருளை
வாரி வழங்கும்
ஒருமுறை உன்னைத்
தொழும்அன்பர் யாவர்க்கும்
ஹேரம்ப கணபதி
அருள்நமைக் காக்கும்!                        -சுரேஜமீ 

Nov 5, 2012

இதுதான் ஐநாவின் நியதி!!!

உரிமைகள் மறுக்கப்படும்போது
உணர்வுகள் மேலோங்குமென்பது
உலக நியதி!!!

ஜனநாயகம் என்பது வெறும்
ஜடனாயகம் ஆகும்போது,
அஹிம்சை என்ன செய்யும்?
அறம்  துறந்தவர்கள்
ஆட்சி செய்தால்?

பல நூற்றாண்டுகள் ஆண்ட சமூகம்
அரை நூற்றாண்டுக்கும் மேல்
அறவழியில் கேட்டார்கள்;
அனுமதி எங்கள் உரிமையை என்று!
ஆண்டோர் எவரும் செவி சாய்க்கவில்லை!

அடுத்து வந்தோர்
ஆயுதம் ஏந்தினர்!
இழந்த உரிமையை
ஈன்றெடுக்க!

உரத்த குரலில்
ஊரே அலறியது!
எதிர்த்து நிற்க
ஏது  துணிச்சல்?

ஐயம் அற்ற மறவன் சொன்னான்;
ஒன்று பட்டால்,
ஓங்கி ஒலிக்கும் நம் சத்தத்தில்;
ஈழம் பிறக்குமென்று!!!

தந்தை செல்வா தொடங்கி
தமயன் பிரபாகரன் வரை
உயிர்பலி கொடுத்தது தான் மிச்சம்!
உரிமையை மீட்டெடுக்கவில்லை!!!

அமெரிக்காவின் நிலையை
ஆர்பரிப்போர் இருக்கும் வரை,
ஆப்ரிக்காவுக்கு நீதி
ஆசியாவிற்கு அநீதி;
இதுதான் ஐநாவின் நியதி!
                    - சுரேஜமீ .

Nov 1, 2012

ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!

ஒருநாளும் உன்னை வணங்கும் உத்தமன் நானல்லவே,
இருந்தாலும் எனைக் காக்கும் பரம்பொருள் நீயல்லவா!!

காஞ்சி நகர் வாழும் கருணை உள்ளமே உனைக்
காண்பவர் கரை சேர்வர்; ஊழிப்  பெருங்கடலை
எண்ணக்குவி சேர்ப்பார்; உன் திருநாமம் சொல்லி,
தின்னக்  கூலி உண்டோ? தெவிட்டாத உன்னருளை !  (ஒரு நாளும்)

கடவுளை நானிங்கு கண்டதில்லை உன்னைக்
கண்ட நாள் முதலாய் கடவுளில்லை;
உற்றார், பெற்றாரும் உறவுமில்லை; என்றும்
உன்னடி சேர்ந்தார்க்கு அனைத்தும் நீயே !        (ஒரு நாளும்)

ஆசை எனும் தேரில் ஏறிவிட்டேன்;
மாயை எனும் வலையில் வீழ்ந்து விட்டேன்;
இன்பம் எனும் தூண்டில் கொணர்ந்த இந்த
துன்பச் சுமை தாங்கா, துடிக்கின்றேன்!                (ஒரு நாளும்)


அற்ப வாழ்வினை, நீ அற்புதமாய் மாற்றி
அடியேன் எனை நீயும் ஆதரிப்பாய்;
இனியும் வாழ்நாளில், பிறர்க்கின்னா செய்யாமை
எனைக் காத்து, வாழ்வில் ஒளியேற்றும் என் தெய்வமே!!

ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!
ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!
ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!
ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!

ஒருநாளும் உன்னை வணங்கும் உத்தமன் நானல்லவே
இருந்தாலும் எனைக் காக்கும் பரம்பொருள் நீயல்லவா!!!                 -  சுரேஜமீ