Jan 9, 2013

சரணம் சரணம் அம்மா!



அம்மா....அம்மா.....அம்மா....அம்மா.....

அருகிருந்து காப்பவளே என்தாயே நீயன்றி 
யாருளர் எனைக்காக்க உனையல்லால் தாயே?
அகிலத்தில் நானுதிக்க காரணமான நீயே 
அன்றாடம் பார்த்தென்னை ரட்சித் தருள்வாயே!

எங்கிருந்தோ வந்தெந்தன் எண்ணமெல்லாம் நிறைந்தாயே 
ஏற்றம்தனைத் தந்தென்னை போற்றும்படி வைத்தாயே 
உற்றதுணை என்றென்றும் தாய்போல் வருவாரோ 
மற்றதுணை வெல்வதற்கு மாண்புகள் நீயன்றோ!

விடியலும் மடியலும் உன்இருவிழிப் பார்வையன்றோ 
அடியனை ஆதரித்தல் உனகமுள சிந்தையன்றோ 
ஆக்கலும் அழித்தலும் அகிலமமுன் செயலன்றோ 
அன்னையே வழிநடத்தி காப்பதுந்தன் கடனன்றோ!  

பேதங்கள் ஏதுமின்றி மண்ணில்வாழும் உயிர்க்கு 
சேதங்கள் வருமுன்னே கதிரொளியாய் ஊடுருவி 
உயிர்காக்கும் அன்னையே உனையன்றி யார்துணை 
ஊழியும் போக்கிடுமே உன்பெருங்கருணை தாயே!

சரணம் சரணம் அம்மா....சரணம் சரணம் அம்மா!
அம்மா....அம்மா.....அம்மா....அம்மா.....

Jan 8, 2013

ஏதுகுறை எனக்கென்றும்!


குருவே சரணமென்றே னென்குறைகள் களையுமையா 
உருவே நீயென்றானபின் னெதற்கினி திருவுருவம்?

ஆண்டவன் அருகிலில்லை எனவறிந்திலேன் நானென்றும் 
எனையாளும் நீயிருக்க ஏதுகுறை எனக்கென்றும் 
இந்நாளில் நான்கண்ட இறையருளே பரமகுரு 
எந்நாளும் எனைக்காத்து இரட்சிப்பாய் பரம்பொருளே 

எத்தனை மகான்களிந்த திருநாட்டில் வந்தனரே 
அத்தனையும் இறைவனி னருட்த்திரு வருளாலே 
யுகங்கள் கடந்தாலுமந்த முகங்கள் மறவாதே 
நெறிகள் காட்டினரெந்தன் வாழ்க்கை பயனுறவே 

ஆதிசங்கரர் வழிவந்த ஆத்மகுரு பரமேஸ்வரா 
ஆனந்த வாழ்க்கையளித் தாட்கொள்ளும் மகேஸ்வரா 
அவதாரத் திருவுருவே அகிலத்தைக் காப்பவரே   
அடியேனை ஆதரிக்கும் அன்னையே ஆரருளே 

இறையருளே குருவருளாம் குருவருளே இறையருளாம் 
இத்திருநாளி லந்தஇறையருளில் இரண்டறக் கலந்தஎங்கள் 
இறைவனே பரமகுருஅனுராதா நட்சத்திரமும் சேர்ந்ததே 
இன்றுஉனைப் பாடுமிவ்வேளையிலே என்குருனாதரே 

குருவே சரணமென்றே னென்குறைகள் களையுமையா 
உருவே நீயென்றானபின் னெதற்கினி திருவுருவம்?