Dec 26, 2012

இழிகுலத்தைப் பெற்றெடுக்க?


ஏ  தமிழ்ச் சாதியே 
இன்னும் என்ன உறக்கம் 
உன் பிஞ்சு மழழைகளின் 
கொஞ்சும் மொழியில் 
நான் இல்லை?

என்னால் உலகம் தலை நிமிர 
உன்னால் நானோ தலை குனிய 
அன்றே சொன்னான் ஒருவன் 
"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" மென
அடுத்து வந்த 'பாரதி', அவனை 
'பேதை உரைத்தான்' என்றான்!
இருவரும் எந்தன் பிள்ளைகள்தான்...
ஒருவன் வெந்து சொன்னான்;
மற்றவன் நொந்து சொன்னான்;

ஆனால், 
இன்றோ இயன்றவரை என்னை 
இயம்புவது தவிர்க்கின்றீர்?
நாணிக் கோணி நுனி 
நாக்கில் ஆங்கிலம் பேசி 
நாளும் உறவை வளர்க்கின்றீர்;
என்ன தவம் செய்தனை நான்?
இப்படி ஒரு இழிகுலத்தைப் 
பெற்றெடுக்க?

தாத்தன்; பாட்டன்; முப்பாட்டன்;
கட்டிக்காத்த பண்புகளை 
காற்றோடு விட்டு 
சுவாசத்தைத் தேடும் 
சுயநலமே!
நீ கருவாய்; உருவாய்;
உணர்வாய்; உளவாய்;
மாண்பாய்; மதியாய்;
பண்பாய் ; பரிவாய்;
கற்ற; பெற்ற;உற்ற 
அத்தனையும் என்னுள் உளது 
என்பதனை எப்போது 
அறிவாய்?
உன்னால் நான் வாழ்கின்றேன் 
எனும் இறுமாப்பை விட்டொழி;

ஆயிரம்; ஆயிரம் ஆண்டுகள் 
இன்னும் நானும் வாழ்கின்றேன்
இனியும் நானும் வாழ்ந்திடுவேன்;
உன்னைபோன்ற அறிவிலிகாள் 
எந்தன் பிள்ளை எனமாட்டேன்;
மாண்டு போகும் நீயே 
மண்ணில் வாழும்போது 
மாண்புகள் பெற்ற எனைப் 
போற்ற இன்னும் ஆயிரம்
பாரதியும்; இளங்கோவும்;
வள்ளுவனும்; 
பிறந்தும்; இறந்தும் 
பிறப்பார்கள்;
புவியினில் என்னால் 
புகழீட்டி மானுடம் 
போற்ற வாழ்ந்திடவே!

இனி நான் கூறுவேன் 
தமிழினமே!

இருசாதியுண்டு தமிழுலகில் 
என்னைப் போற்றும் ஒரு சாதி 
அதுவே இனிமேல் என் சாதி!
தன்னைப் போற்றும் ஒருசாதி 
அதுவே இனிமேல் மறு சாதி!
தரங்கெட்ட இனத்தின் 
தலை சாதி!!

'தமிழ் இனி' என 
குறும்படம் எடுத்த 
என்பிள்ளைகள்; 
கலங்காதீர்......
என்னை அழிக்க விடமாட்டேன்;
என்றும் உன்போல் சிலரிருக்க;
வாழ்த்துச் சொல்லி 
வளர்கின்றேன்!!! 
வாழி என்சாதியென்று!!!    

Dec 24, 2012

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

உலகமறியாத சிறுபிள்ளை நான்
உன்னைச் சேர்ந்திட்ட ஒருபிள்ளை தான்
என்னைக் கரைசேரும் குருவல்லவா
ஏதுமறியாயோ என்குருநாத கேள்;

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

அன்புசெய்கின்றேன் உலகத்திலே அந்த
அன்பே அறியாதோர் பலரிருக்க இங்கு
அன்பே தவமென்று அறிவுறுத்தும் உன்
அன்பால் நிலைக்கின்றேன் நானென்றுமே!

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

வஞ்சம் சூழ்ச்சியோடு வாவென்ற ழைகின்றார்
கொஞ்சும் மழழையாய் தவிக்கின் றேனுந்தன் 
தஞ்சமன்றி யுயிர்காக்க எவருளர் இவ்வுலகத்தில்
நெஞ்சம்வந்து எனைக்காத்திடவே வருவாய்!

உலகமறியாத சிறுபிள்ளை நான்!


எண்ணக்கலத்தி லுந்தன்நாம மன்றியேது மறிகிலேனே 
வண்ணக்கோல மல்லவாழ்க்கை என்றுணர்ந்தே நின்னைச் 
சரணடைந்தே னெந்தன்பிழை பொறுத்துக் காத்திடப்பா
கருணாகர மூர்த்திகடைக் கண்ணாலே பார்த்திடப்பா....

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

"ஓம் நமோ நாராயணா"


அரங்கன் வாழுகின்ற ரங்கமே 
திருவரங்கன் வாழுகின்ற திருவரங்கமே 
தினமும் தொழுவோர்க்குத் திருவருள் தரும் 
அரங்கன் வாழுகின்ற ரங்கமே!

ஏகாதசியன்று விரதமிருந்து  ஒருமனதோ டவன் 
எட்டெழுத்து மந்திரமாம் "ஓம் நமோ நாராயணா" என 
ஓதுமன் பருக்கே வேண்டுவன வழங்கிடுவான் 
ஒன்று மறியாத குழந்தைபோல் நின்றிடுவான்!

நாலாறு ஏகாதசி விரதத்தின் மகிமையினை 
ஒருநாள் ஏகாதசி தருமந்தத் திருநாளாம் 
வைகுண்ட ஏகாதசி நன்னாளா மின்று 
வைகுந்தன் தரிசனமே கண்டிடுவார்! 

வாமன னருள்வேண்டு மாந்தரும்  பெற்றிடுவார் 
வானவர் போற்றிடுமென் பரந்தாமனின் பாதமே 
பரமபத வாசலில் நின்றிடுவ ரந்தரன்கனின் 
தரிசனத்தைக் கண்டிடவே இந்நாளில் அரங்கத்திலே!

அரங்கன் வாழுகின்ற ரங்கமே 
திருவரங்கன் வாழுகின்ற திருவரங்கமே 
தினமும் தொழுவோர்க்குத் திருவருள் தரும் 
அரங்கன் வாழுகின்ற ரங்கமே!

Dec 19, 2012

மந்திரத்தை எமக்களியும்!

மனமென்னும் எந்திரத்தை
மாத்திரத்தில் இயக்குமந்த
மந்திரத்தை எமக்களியும்
மன்றாடிக் கேட்கின்றோம்!

உருவெடுக்கும் சிந்தையெல்லாம்
உயர்வான பொருளாம்
உன்னெறி பற்றும்
உருப்பெற்று நற்கதியருளட்டும்!!

ஜோதியிலே சேர்ந்தஒளி
காணுதற்கு அரியதொன்று
ஆதியந்தம் அற்றதது
ஆனந்தம் அளித்திடுமே!!!

வேண்டுவது கொடுத்திடுவாய்
வேண்டுமந்த மாந்தருக்கே
போதுமென்ற மனமென்றும்
பூரிப்பாய் வாழ்ந்திடவே!!!!

ஜகத்தினையே வென்றிடலாம்!

உன் திருநாமமல்லால் வேறேதுமில்லை இங்கே
என் மனவேண்டுதல் கேட்டருள குருநாதா
இப்பிறவியில் யான்செய்த பாவமேது தெரியாதே
எப்பிறவியிலும் உந்தன் பாதமே சரணமய்யா!

காஞ்சிநகர் அலங்கரிக்கும் காமகோடி பீடமது
வாஞ்சையுடன் வருவோரை வரவேற்கும் பீடமது
என்னகுறை சொல்லுமுன்னே தீர்க்குமொரு பீடமது
மன்னவராய் வீற்றிருக்கும் மகானுறை பீடமது

மதங்களைத் தாண்டிவரும் மக்களைக் கண்டிடுவீர்
மகாபெரியவ தரிசனத்திற்கு ஏங்குகின்ற கூட்டமது
புண்ணியங்கள் சேர்த்திடுவார் கருணாகர முகம்பார்த்து
எண்ணியவை கிட்டிவிட்ட மகிழ்ச்சியிலே திளைத்திடுவர்

இறையருளும் குருவருளும் நிறைந்தந்த இடந்தனிலே
மறைகளுமே ஓதுகின்ற மங்களங்கள் முழங்குகின்ற
வானவரும் வாழ்த்துகின்ற வளங்களெல்லாம் தருகின்ற
என்னருமை இடமாமே காஞ்சிநகர் சென்றிடுவோம்!!

ஜகத்குருவை கண்டிடலாம்! ஜகத்தினையே வென்றிடலாம்!
ஜெய ஜெய சங்கர; ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர; ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர; ஹர ஹர சங்கர!

Dec 18, 2012

பண்டிட் ரவிசங்கர்ஜி நினைவாக;

வங்கத்தின் ஓடி வந்த 
இசையின் மிகையால் 
மையத்துநாடு மட்டுமல்லால் 
எங்கெங்கு காற்று புகுமோ 
அங்கெல்லாம் பரவியது 
உன் இசையென்னும் இனிய ராகம்.....

பண்ணும் இசையெல்லாம் 
மின்னும் உன் கரம் பட்டால்;
சிதார் உன் கரங்களால் 
கிறங்கடித்த உள்ளங்கள் 
இன்று சிந்தை கலங்கி 
இருக்கின்றன.....

இறப்பே உன் இருப்பை 
உறுதி செய்ய 
வீணையை விண்ணுக்கு 
அழைத்தாயோ?

இந்த மண்ணில் 
இசைகேட்கும் மனிதன் 
இருக்கும்வரை 
பண்டிட் ரவிசங்கர்ஜி 
பல்லாண்டு வாழ்ந்திடுவார்!
பலரும் அவர் புகழ் பாட!!

Dec 15, 2012

இதயம் துடிக்கிறது; இளம்பிஞ்சுகளை நினைத்து!


கனெக்டிக்கட் (Connecticut, US) டில் நடந்த 
கொடுமை இது!

பள்ளிக் குழந்தைகள் 
பலிகடாவாகி இருக்கின்றன....
பாவியின் கைகளில் 
பதைக்க வைக்கும் துப்பாக்கி
மனித உரிமைகள் பேசும் 
மண்ணில் மாண்டுபோன 
ழைகள்!

தன்னிலை மறந்த ஒருவன் 
தாயையும் கொன்று 
தனயனையும் கொன்று 
தானும் மாண்டுள்ளான்?

இரத்தபந்தம் அறியாதவன் 
இரத்தத்தை குடித்து 
இருக்கிறான்!

இதயம் துடிக்கிறது;
இளம்பிஞ்சுகளை நினைத்து!

என்ன பாவம் செய்தன?
எவனோ ஒருவன் சட்டெனச் 
சுடுவதற்கு?

குடும்ப உறவுகளின் 
மகத்துவம் அறிந்திருந்தால் 
குருதி சிந்தி இருக்காது!

அன்னையின் அரவணைப்பும் 
தந்தையின் அறிவணைப்பும் 
சுற்றங்களின் சூழணைப்பும் 
சரியாக அமையாதவனால் 
ஏற்படும் பேரழிவிற்கு 
எடுத்துக்காட்டு இச்சம்பவம்!

அரும்புகளின் பெற்றோரே 
ஆறுதலற்று நிற்கின்ற,
உங்களை எப்படிச்  சொல்லித் 
தேற்றுவது?

எல்லோருக்கும் விடிந்தது 
இவர்களுக்கு இடிந்தது.....

இறைவா, 
இந்த பெற்றோருக்கு 
இதயத்தில் பலத்தையும் 
இனியொரு வாழ்க்கைக்கு 
வளத்தையும் கொடு!!!

ஆழ்மனதிலிருந்து வரும் 
ஆற்றாத துயரத்தை 
விழிகளின் நீராக 
விதைப்பதைத் தவிர, 
யான் வேறொன்றும் அறிகிலேன்!
என் அஞ்சலியைச் செலுத்த
இந்த இளந்தளிர்களுக்கு!!!

Dec 13, 2012

புதுக்குறள் - 11

புதிதாகச் சிந்தித்தேன்...திருக்குறள் வடிவில்;

கல்வியைத் தேடித்தனி யார்முன் போவானேன்
கருத்தா லரசுசெய்யுங் கால்.

விளக்கம்:

அரசாங்கம் நல்ல தரமான கல்வியைக் குழந்தைகளுக்கு அளித்தால், தனியார் கல்விக் கூடங்களுக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது.  இந்த அவலநிலை மாற, ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

Dec 12, 2012

மானுடம் பெற்ற வரம்!

பாரதி.....

சலாம் போடும் அடிமைகளை,
சமூக அவலங்களை,
பெண்ணியம் எதிர்க்கும்  கோழைகளை,
பண்பாட்டைக் குலைக்கும் சதிகளை,
ஏய்த்துப் பிழைக்கும் வர்க்கங்களை,
ஏகாதிபத்திய அரசுகளை,
 
சுட்டெரிக்கும் நெருப்பு 
சுழலும் சூறாவளி 
பாயும் காட்டாறு
பணியா மாவீரன் 
எழுத்தால் போராடும் 
ஏவுகணை இவன்!!

இவன் பிறந்தது 
இம்மண்ணின் தவமன்று 
மானுடம் பெற்ற வரம்!

ஏனெனில், மனிதன் மட்டும்தான் 
இயற்க்கைக்கு போட்டியாக 
இணைப்புக்கு அடங்காத 
எல்லாம் என்னால்தான் 
என மார்தட்டும் பேதையாக 
போதையில் இருப்பவன்!

சிந்தையைத் தெளிவிக்க 
சிங்கமாய் வந்தவன்தான் 
எட்டயபுரம் தந்த 
பாட்டுடைத் தலைவனவன்!
தமிழெனும் வாள் கொண்டு 
தரணியில் போர் தொடுக்கும் 
தகைச்சார்ப் புலவனவன்!
தன்னிகரில்லை என என்றும் 
மண்ணில் புழுகுகின்ற 
மாந்தருக்கிடையே தான் 
மானமிகு பாரதியும் 
வாழ்ந்தான் எனும்போது 
வாழ்க்கையே இலட்சியமாகிறது!

இந்நூற்றாண்டில்,

இவன் போல் எவர் வாழ்ந்தார்?
இவன் போல் எவர் மடிந்தார்?
வரலாறு கேட்கிறது... 
வாய்மூடி நிற்கிறது தமிழ்....

நேற்றைய நன்னாளில் 
நயமிகு புகழ் பாடிய 
அத்துணை உள்ளங்களுக்கும் 
அடியேனின் வந்தனங்கள்!!
இதுபோல் என்றென்றும் 
அவன் புகழ் பாடிடுவோம் 
அவனியில் மானுடம் 
அழியாப் புகழ் எய்திடவே....

புதுக்குறள் - 10

பொதிசுமக் கும்கல்வி வேண்டாமே யென்றும்நம் 
மதிபயக்கும் நிலைபோதும் நன்று.

விளக்கம்:

இன்றைய கல்விச் சாலைகளுக்கு போகும் நம் குழந்தைகள் பொதிகள் சுமப்பது போல அடுக்கடுக்காய் புத்தகங்களைச் சுமக்கிறார்கள்.  அதை விடுத்து, நம் அறிவைக்  கூட்டுகின்ற நிலையில், தெளிவான கல்வி இருத்தலே நன்மை பயக்கக் கூடியது.

புதுக்குறள் - 9


வியாபாரச் சந்தையில் கல்வி வந்ததுகாண் 
சேதாரமே ழையின்தலை யில்.



விளக்கம்:


கல்வி என்பது சேவை என்பதொழிந்து, எப்பொழுது வணிகமாக மாறி சந்தைக்கு வந்ததோ, அன்று முதல் ஏழைகளுக்கு எட்டாத கனியாக, மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.  வாயையும், வயிற்றையும் கட்டித் தன் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கொடுக்கப் படாத பாடு படுகின்றனர்.

Dec 11, 2012

M S

M S
இந்த இரண்டெழுத்து
இதயங்களை வருடாத
நாட்களே இல்லை...

குயிலும் தமிழும்
செய்த தவம்;
ஒரு இசைக் குயிலாக
ஒவ்வொரு இந்தியனையும்
கட்டிபோட்ட குரல்!

ஆலயங்களில்....
ஆண்டவன் சந்நிதியில்,
திருப்பள்ளி எழுச்சியே....
திருமகளின் குரல் தான்
என்றால் மிகையாகாது.....

எத்தனை எத்தனை
கீர்த்தனைகள்...
தெய்வீக கானங்கள்...
தேவ மந்திரங்கள் .....
உன் குரலால்
உச்சரிக்கப்பட்டு
உயிர் பெற்றன.....

நீ
குறை ஒன்றும் இல்லை பாடினால்
குதூகலித்து வருவான் வேங்கடன்.
உன் சுப்ரபாதத்தில் தான் இன்றும்
துயிழெழுகிறான் அந்த அரங்கன்!

நீயோ நீங்காத்துயில் கொண்ட நாள் இது!
(இன்று M S நினைவு நாள்)

Dec 10, 2012

புதுக்குறள் - 8


கற்றார் மற்றொரு வர்க்குகல்வி புகட்டின் 
கல்லாமை இருள் அகலும்.                                              

விளக்கம்:

கற்றவர்கள் குறைந்த பட்சம் ஒரு கல்லாதவருக்காவது கல்வி அறிவு ஏற்படுத்தினால், நாட்டில் கல்லாமை எனும் இருள் அகன்று, கல்வி அறிவில் முழுமை பெறலாம்.

Dec 9, 2012

புதுக்குறள் - 7

நினைத்து உண்ணலும் துரிதன தவிர்த்தலும் 
நீண்ட ஆயுள் தரும்.                                              

விளக்கம்:

உணவு அருந்தும்போது நம்முடைய சிந்தனை உயிரின் ஆதாரமான உணவைப் பற்றிமட்டுமே இருத்தல் அவசியம்.  அப்பொழுதுதான் அந்த உணவானது நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.  துரித உணவு வகைகளை நாம் அறவே தவிர்த்தல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது . இவ்விரண்டு செயல்களும், நாம் நீண்ட நாட்கள் உயிர் வாழத் துணை நிற்கும்.

புதுக்குறள் - 6

மக்குமக்காக் குப்பை பிரித்திடில் ஈட்டும் 
மண்ணில் பயனுற செயல்.                                              

விளக்கம்:

அன்றாடம் சேருகின்ற கழிவுப் பொருள்களை மக்கும் (Biodegradable)  மற்றும் மக்காக் கழிவுகளாக (Non-biodegradable) இனம் பிரித்து போடுவோமேயானால், அதன் மூலம் இந்த மண்ணில் நாம் பெறக்கூடிய பயன்கள் எண்ணற்றவையாகும்.  மின்சாரம், எரிசக்தி போன்ற செயல்களுக்கு ஏற்றதாக அமையும்.   முக்கியமாக நோய்  பரவுவதைத் தடுக்கும்.