Jun 6, 2015

சிலையாய் நிற்பதில்தான் பெருமை!

May 30, 2015

May 25, 2015

அழகிய வனமாய்
   ஆகட்டும் உலகெலாம்!


May 14, 2015

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


May 12, 2015

வள்ளுவ மாலை


திருக்குறள் ஓதுவீர் ஓங்கும் புகழெய்த
ஓடும் மனதிற்குப் போடும் கடிவாளம் 
தேடும் அறிவிற்கோர் ஏற்றம் - வருமொரு
தீதும் அகற்றிடும் நூல்!

நூல்பல தேடிப் படித்தாலும் வாரா
தெளிதமிழ் சிந்தனை ஏகும் - திருக்குறள்
வாழ்வில் தரும்நலம் யாவும்! - அதன்வழி
​நில்​
மானுடம் போற்ற சிறந்து!

வெல்லும் செயல்யாவும் சொல்லும் வழிநி
​ற்க
உள்ளும் புறமும் தீதறுநல் லின்பமும்
​​
மாற்றானும் வாழ்த்திட நாளும் - பெருகிடும்
மாண்பும் திருக்குறள் பண்பு!

நீடில்லா வாழ்சேர் நிலமும் - ஆக்கும்
நிதம்பல செல்வமும் யார்கொண்டு செல்வர்?
தகுமென வாழா மனத்தினன்- தெய்வத்
திருக்குறள் ஓதல் சுகம்!

நானென் செயவென நோகாமல் நாளும்
நவில்வாய் திருக்குற ளொன்றை - அதுதரும்
நன்னெறி பற்றிடத் தெருவோர் போற்றும்
நாயகன் நீயாவாய் நம்பு!


அன்புடன்
சுரேஜமீ​​

May 10, 2015

அன்னையர் தினம்?

அன்னையர் தினம் என்று அன்னியன் வைக்கின்றான்;
அதற்கும் நாமெலாம் அடிபணிந்து நிற்கின்றோம்!
அன்னைக்கு ஏதொரு தினம்?
அனுதினமும் அவள்தினம்தான்!

அன்னை தந்தை வளர்த்தெடுத்தார்
அவனியில் நாம் மகிழ்கின்றோம்!
அவர்தம்மை பிரிந்திருத்தல்
நாம் செய்த பாவமன்றோ!
அவர்தம்மை பார்த்திருத்தல்
அன்னவரின் பெருமையன்றோ!
அதுகிடைக்கா எதுகிடைத்தும்
அருளில்லை இவ்வுலகில்!
பெற்றவரைப் போற்றிடுவர்
பேரெல்லாம் பெற்றிடுவர்
பெருமைபட வாழ்ந்திடுவர்
பெருகிவரும் செல்வமெலாம்!
வாழ்த்துதற்கு நாமென்ன வானவரா?
வணங்கிடுங்கள் தெய்வமதை
வளர்நாளும் வரலாறாய்
வாழ்ந்திடுங்கள் வாழ்த்துக்களால்!!

- சுரேஜமீ

May 9, 2015


சிற்பங்கள் சொல்வதென்ன?




எண்ணக் கருவாக்கி
எனக்கோர் உருவமிட்டு
வண்ணக் கனவுகளை
வார்த்து எடுக்கின்றாள்!

வாழும் வாழ்வினிலே
வந்துபோகும் எண்ணமெலாம்
வாழ்ந்தால் வரலாறு
வீழ்ந்தால் வரும்நாளும்!

மனங்கள் ஒன்றாக
மணலே சாட்சியாக
மன்னன் துணையாக
மங்கை மகிழ்வாக

மண்ணின் சிற்பங்கள்
சொல்லும் சேதியென்ன?

வாழ்வில் இருபக்கம்
வசந்தம் ஒருபக்கம்
வாடும் மறுபக்கம்
வளைத்துப் பழகிக்கொள்!

வாழ்வே சுகமாகும்
வளர்தமிழ் தினம்படித்து
வள்ளுவம் ஏகிடுவாய்
வாழ்வின் நெறிவிளங்கும்!

துருவ முனைபோல
இருதிசை இருந்தாலும்
ஒருமுகம் பார்த்திருக்க
உறவும் பெருகிடுமே!

அலைகள் அழித்துவிடும்
அழகிய எனைக்கூட!
அதற்கென அழுவதில்லை
அழகாய்ச் சிரித்திடுவேன்!

அழிவினை நினைத்திருந்தால்
ஆக்கமும் வந்திடுமோ?
ஊக்கமும் கொண்டிடுவாய்
ஏக்கங்கள் தொலைந்திடுமே!

வாணும் வையகமும்
வானவர் போற்றுதலும்
வளைக்கரம் பெற்றிடவே
வான்புகழ் கொண்டிடவே!

நாயகன் மனமாறி
நங்கையின் முகம்பார்க்க
நற்துணை யாயிருந்து
நயமுடன் வாழ்வதற்கு!

நானும் உருப்பெற்றேன்
நாழிகை வரம்பெற்றேன்
நானிலம் பார்த்துவிட்டேன்
நானுனைச் சேர்ந்தும்விட்டேன்!!

கலையென மகளிருக்க
கண்ணிலும் மறைத்திருக்க
காட்சியும் தெரியலையோ
காளையின் மனதிற்கு?

கருத்தாய் எழுந்துவிடு
காலமும் கரம்சேர்த்து
கலைநிகர் படைப்பதற்கு
கன்னியும் இருக்கின்றாள்!

கணத்தினில் மறந்துவிடு
கடந்தன துன்பமெலாம்
கடலலை கரைக்குமுன்னே
கண்கவர் சிலையெனைப்பார்!

கன்னியின் துணையாலே
கண்டிட்டேன் இன்பம்யான்
காத்திரு உனக்குமவள்
கலைநிகர் வார்த்தெடுப்பாள்!

நம்பிக்கை கொண்டெழுவாய்
நாயகி கைகோர்ப்பாய்
நாளையும் வந்திடுவாய்
நானுனில் கலந்திருப்பேன்!

மணலினின் தேடாதே
மானுடம் தேடிஎடு
காற்றினில் கலந்துவந்து
கடவுளாய் வாழ்த்திடுவேன்!!

அன்புடன்
சுரேஜமீ


May 7, 2015

வாழுகின்ற தமிழுக்கு ஒப்பாக வாழுபவன்!


வாழ்த்துக்கள் வருவதற்கு வரம்வேண்டி நிற்போர்முன்
வானவரே வலியவந்து வாழ்த்துவது கண்டவன்தான்
வையத்திலொரு கவியாம் கவிக்கெல்லாம் அரசனவன்
வாழுகின்ற தமிழுக்கு ஒப்பாக வாழுபவன்!

கூடுகின்ற கூட்டமெலாம் கூவிநிற்கும் குயில்களாக
பாடுகின்ற பாட்டெல்லாம் படைத்தவனே பகன்றதன்றோ!
தேடுகின்ற நெஞ்சமெலாம் தேடிவைத்த சொத்துமவன்
வீடுதோறும் நிறைந்திருக்கும் வீதியெல்லாம் புகழ்மணக்கும்!

அன்னைத் தமிழ்கண்ட அருமைத் தவப்புதல்வனவன்
அவன்புகழைப் பாடுதற்கு அவனியில் யார்தகுதியென்று
அவனிருந்து எடுத்ததுதான் ஆலமரமான தென்றால்
அவனுக்கும் துணைவேண்டி அடுத்தவனும் வருகின்றான்!

பாட்டெழுதி நோட்டடிக்கும் பரிதாப நிலையில்லை
பாட்டேவந்து நிற்கும் தனைஎழுது தமிழாலென்று
பாட்டவனும் புனைந்திடவே பாரெல்லாம் மகிழ்ந்திடவே
பாட்டாளி வர்க்கமெலாம் பைந்தமிழால் நனைந்ததன்றோ!

கூட்டிவரும் கூட்டமெலாம் கூண்டோடு கலைந்துவிடும்
கூடுகின்ற கூட்டமெலாம் பார்போற்ற நிலைத்துவிடும்
கலைக்கூடம் சொல்லுமிதை இவன்பெற்றார் எவரென்றே
கண்ணதாசன் வழிவந்த வாழியவன் வணங்கிடென்றே!!

வாழி வாழி கவியரசர்;  வாழி வாழி கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்(பம்மல்)
வாழி வாழி காவிரியே; வாழி வாழி சுரேஜமீ!




May 4, 2015

May 3, 2015

அன்பினும் வலியது உளதோ?


Apr 30, 2015

அஞ்சலி - ஓவியர் கோபுலு


Apr 28, 2015

நம்பிக்கையாய் இருக்கிறேன்


Apr 23, 2015

என்ன நடக்கிறது?

என்ன நடக்குது எங்கள் நாட்டிலே
  எதிரரெதிர் வருபவனும் தாக்கவும் அவனவனை
ஏட்டினைப் படித்திடினும் எவனுக்கும் அறிவுமில்லை
  ஏகிட்ட கல்வியென்றும் எதுசரியெனவும் இல்லை
இருப்பவன் நம்பிடவும் மறுப்பவன் பரப்பிடவும்
  இருக்குது சுதந்திரமே இயம்பவும் செய்திடடா
கருத்தெதிர் கருத்தினையும் விதைத்திடு முடிந்தவரை
  கருத்தினில் கொள்பவரைக் கொண்டாடு அடிபற்றி

திணித்திட உனக்குமில்லை உரிமையும் துளியுமடா
  திண்பவன் உணர்வதில்தான் உணவின் அருமையடா
பழமையிலும் உண்டு நலன்விளை சேதிகளும்
  பண்பினை வளர்ப்பதற்கும் பேரினம் வாழ்வதற்கும்
சொல்வண்ணம் நடந்திட்டால் சேரினம் சேர்ந்திடுமே
  செந்தமிழ் நடைபழகி சிந்தனைச் சிறகேறி
வம்பினை வளர்ப்பதென்றும் நற்றமிழர் மறபன்று
  வள்ளுவம் வழிவந்த வான்புகழ் தமிழினத்தில்

வேண்டாம் சாதியென வேண்டுவ உரைத்திட்டும்
  வீணில் வளர்த்ததுவும் வெறியர்கள் செயலன்றோ
பேதங்கள் பார்ப்பதுவும் வேதங்கள் செய்ததென்றால்
  ஓதவும் மறுத்திருந்தால் ஒற்றுமை நிலைத்திருக்கும்
வானமும் வையகமும் அனைவர்க்கும் சமமென்றால்
  வானவர் மட்டுமிதை எப்படி மறுத்திடுவார்?
நாயனார் கதைபடித்தும் நாயகன் அறியாமல்
  நானிலம் சண்டையிட்டால் நாமும் அழிந்திடுவோம்

நம்பிக்கை கொள்வதுவும் நம்மை உயர்த்திடவே
  நமக்குள் பிரிவறுத்து நாளும் மகிழ்ந்திடவே
அவரவர் நம்பிக்கை அவரவர் தனிவிருப்பம்
  அடுத்தவன் மறுப்பதற்கு அவனென்ன ஆண்டவனா?
அழிப்பது எனவந்தால் இயற்கையும் ஆண்டவனே
  அடக்கிடு சீற்றங்களை அவரவர் மட்டினிலே
அறிவினைப் பயிர்செய்ய ஆற்றலும் பெருக்கிடலாம்
  அகிலமும் அறுவடையாய் போற்றியே வாழ்ந்திடலாம்

அரசியல் மதங்கடந்து சாதியும் வேரறுத்து
  அறிந்திடு சரியெதென்று ஆவன செய்வதற்கு
எவனும் தலைவனென்று ஏகிட மறுத்துவிடு
  அவனவன் குடும்பத்தை ஏற்றுதல் நீயுங்கண்டு
அன்பைக் காட்டிடவே உனக்கவன் தலைவனென்றால்
  அன்பாய் உனைநம்பி வந்தவர் என்செய்வார்?
அனுதினம் யோசித்து வாழ்க்கையை உயர்த்திவிடு
  ஆனந்தமாய் வாழ்ந்து அனைவரும் இன்புறவே!   

 - சுரேஜமீ

இன்று உலக புத்தக தினமாமே? - ஏப்ரல் 23

புத்தகம் 
புகும் அகம்
புக நன்கே
பூவிதழ் விரிய

அகம் 
புறம் நோக்கி
அறம் நிலைத்தல்
நிலை அறிவன்றோ?

பொதி அல்ல
புத்தகம்
நிறை மதிதரும்
குறை அகற்றி!

வாசித்தலை
சுவாசிக்க
உள்நுழைக் காற்றும்
உனதாக்கும் அறிவு!

நிறம் 
மொழி
இனம்
மதம் தாண்டும்

மாண்புடை
பண்பிருந்தால்
மானுடம்
வென்றிடும்!

புத்தகம்
புது அகம்
அதன் முகம்
அகம் தகும்!

அதற்கொரு தினம்
அன்றாடம் அதன் தினம்
அவனியின் ஆணிவேர்
அதுதான் புத்தகம்!

போற்றுவோம்
புத்தகம்!
படைப்போம்
புது யுகம்!!

படி
படி படியாய்
படியேறு வாழ்க்கை
பலர் மகிழ வாழ!!

அன்புடன்
சுரேஜமீ
Image result for book images

Apr 22, 2015

உலக பூமி தி(த)னம் - ஏப்ரல் 22

என் பிழை என்ன?




மண்ணில் சொர்க்கமாக
மானுடம் வாழ்வதற்கு
தன்னை அளித்தேன்
தான் அறிவாரோ?

ஓடும் நதிகளும்
தேடும் இரைகளும்
வருடும் தென்றலும்
வனப்பும் மிகுதியாய்

மண்ணும்; பொன்னும்
பொருளும்; போகமும்
வளர்நிறைக் காடும்
வான்மழை பொழிவும்

வாரி வழங்கினேன்;
வாழ்க்கை சுகத்திற்கு!
வேண்டுவன கொடுத்து
வேதனை அடைகின்றேன்!

என்ன சொல்ல?

இனியும் பிறப்பேனா?
இன்னல் தொலைப்பேனா?
என்னவெலாம் செய்தென்னை
ஈட்டி கொண்டு பிளக்கின்றார்?

காடெல்லாம் 
கலைத்து
மேடென்றும்
பள்ளமென்றும்

அவரவர் தரம் பிரிந்து
ஆலைகளும் 
சாலைகளும் 
அமைக்கின்றார்!

காணிகள்
கலைத்து
கட்டிடங்கள் 
கட்டுகின்றார்!

வெட்டி வெட்டி
வேறறுத்து
நானிலத்தை
நஞ்சாக்கி

அணுவென்றும்
ஆய்வென்றும்
தக்க தக்கத்
தாதுவென்றும்

சுட்டுச் சுட்டு
சூடேற்றி
சூழ்நிலையக்
சூன்யமாக்கி

சுகப்படத்
துடிக்கின்ற
மானுடமே!
நானும் உன் அம்மாதான்!

யான் செய்த 
பிழையென்ன?

நீ செய்யும்
பிழைக்கெல்லாம்
பழிபொறுத்த
காரணத்தால்

வரும் நாளில்
மூச்சுக்கும்
காற்றின்றி
தவிப்பிற்கும்
நீரின்றி
பிரளயத்தில்
மூழ்கிடுவோம்

உன்னால் நானும்
என்னால் நீயும்!

விழித்துவிடு
இப்பொழுதே
இனி வாழும்
வாழ்க்கைக்கு!

என்னை வாழ விடு!
ஏற்ற நல்ல வாழ்வு தர!!

அன்புடன்
சுரேஜமீ


Apr 21, 2015

புரட்சிக்கவி பாரதிதாசன் நினைவு நாள் (ஏப்ரல் -21)




பார 'தீ' எனும் சுடர்
பற்றிய தீதான்
பாரதி தாசன்
பைந்தமிழ் நேசன்!

எட்டயபுரம் 
எட்டிப் பார்த்தது
என்னையும் பாட
எண்ணும் ஒருவனா என்று!

தமிழ் கொஞ்சியது
தன்னிகரற்ற 
தனயனின்
தகைசார் எழுத்தில்!

எது சுவை
என்போர்க்கு
கேள்வியைக்
கேட்டான்!

கனியா?
கரும்பின் சாறா?
தேனா?
தீம்பாகா?
பாலா?
தென்னை இளநீரா?

இவைதரும்
சுவை மிகும்
எவை தரும்
என் தமிழ் 

நிகரென்றான்!

அது மட்டுமா?

அமுதத் தமிழ்தான்
ஆருயிர் என்றான்!
வாழ்வும் தமிழ்;
வளமும் தமிழ் என்றான்!

இன்று நினையேல்
என்று நினைப்பது?
நன்று சொல்வேன்
நல்ல தமிழர்க்கு

நயமுடன் படிக்க
நாயகன்
பாரதிதாசன் 
நூலை!

- சுரேஜமீ

Apr 20, 2015

ஆயுதம் கொல்!
அன்பின் வலியதோர் ஆயுதம் ஏதுண்டு?
ஆற்றல் பெருகிநல் போற்றல் தழைக்கும்;
இன்பம் இதுவன்றோ ஞாலம் உயிர்பெறவே
ஆதலின் ஆயுதம் கொல்!

வாழ்வு சிறக்க!
சிகைதொடு வர்ணமும் சேர்ந்திட மாலையும்
கூர்நிறை வாளொடு ஆயுதம் ஏந்தினோம்;
மண்ணில் கொடுமைகள் நீங்கியென்றும் -மாதரும்
பேணிட வாழ்வு சிறந்து!
- சுரேஜமீ

படக்கவிதை
மானுடம் வாழ
மாண்புடன் நாளும்
மாலைகள் தரித்து
மஞ்சளும் ஏகி
ஆயுதம் ஏந்தி
ஆண்டவன் வேண்டி
ஆகமம் பேணி
ஆதலைச் செய்து
நாட்டினில் ஊறும்
கேட்டினைத் தடுக்க
பூட்டினை உடைத்து
ஏட்டினை மாற்ற
நாங்களும் வந்தோம்
நான்மறை போற்றும்
நன்மகள் பாடி
நன்மைகள் பெறவே!
சாதி எமக்கில்லை; இது
சந்ததிப் பழக்கம்!
சாத்திரம் பேணி
சமத்துவம் பற்ற
போனவர் தொற்றி
வருபவர் காக்க
வாள்கொண்டு ஏற்கும்
வல்லமைப் பண்பே
வேறொன்றுமில்லை;
வீணே வதந்தியைத்
தடுத்து எங்கள்
தர்மத்தைக் காப்பீர்!
மதமென்னும் வழியும்
மண்சார்ந்த வழியே
மதமில்லை எமக்கு
மண்ணின் மாதரும் நாமே!
அன்புடன்
சுரேஜமீ


உன்னை அறிந்தால் - வரும் தலைமுறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

நம் கல்விமுறையில் மாற்றம் வேண்டுமென்பது, பெரும்பான்மையினரின் கருத்தாக, இற்றை நாட்களில் இருக்கிறது. இதற்குப் பின்னனி என்ன என்று யோசித்தால், வாழ்வியல் சார்ந்த கல்வியாக, தற்போதைய கல்வி இல்லை என்பதும், ஒரு தேர்விற்காகத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் மனனம் சார்ந்த ஒரு புத்தக அறிவை மட்டுமே தருகிறது என்பதும், குற்றச்சாட்டாக இருக்கிறது.

கல்வி என்பது சிந்தனை ஆற்றலை, பகுத்து உணரும் அறிவை, சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் தன்மையை, வாழ்க்கை நெறியை உய்விக்கும் கோட்பாடுகளை,

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கொடுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது! 
ஆனால், நாம் படித்ததை, நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்தி, நம்மைச் செதுக்கினோமா? என்றால், அதற்கான விடையைத் தேடும் சமுதாயமாக, வளரும் சமுதாயம், இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது!

ஒரு பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே.

'ஐந்தில் வளையாதது; ஐம்பதில் வளையாது! என்பது;

ஆகவே தான், நல்ல பல கருத்துக்களை, மிகவும் சுருக்கமாக, குழந்தைகளுக்கு, ஆரம்பக் கல்வியில் வைத்தார்கள்! ஆனால், அதன் ஆழத்தைப் பெற்றோர்கள் உணர்த்தினார்களா?
என்பதில் தான், கல்வியின் மேம்பாடு இருக்கிறது!
இன்றைக்கு ஆங்கில வழிக் கல்விதான், உலகத்திலேயே சிறந்தது என்ற நினைப்புதான், ஆதாரக் கல்வியான தாய்மொழிக் கல்வியின் சிறப்பைக் கெடுக்கிறது.

ஆங்கிலம் என்பது ஒரு அன்னிய மொழி அறிவு! அவ்வளவே! அது சூழலால் ஏற்படுவது. மொழி அறிவு என்பது, ஒரு புரிதல் சாதனம்! அதுவே, அறிவின் உச்சமாகிவிடாது!

தாய்மொழிக் கல்விதான் தரத்தின் அடையாளம்!

அதற்கேற்ப, தமிழ்க் கிழவி ஔவையாரின் சில பாடல்களும், அதன் கருத்துக்களும், வளரும் சமுதாயத்திற்காகப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்!

கல்வியின் சிறப்பு என்ன? ஏன் படிக்க வேண்டும்? படித்தால் தான் வாழ முடியுமா? என்ற கேள்விகளுக்கு, ஔவையார் என்ன சொல்கிறார் என்று சிந்தியுங்கள்!

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு!

இதைவிடப் பிஞ்சு உள்ளங்களில், கல்வியின் சிறப்பைச் செம்மையாகச் சொல்ல இயலுமா? ஆகக், குழந்தைகள் சிந்திக்க வேண்டுவது, நாம் ஒரு தேசத்தில் மட்டுமே இருக்க வேண்டுமா? அல்லது, மன்னனினும் உயர்வாகக் கற்றவராக இருந்தால், சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறமுடியும்!

இன்றைக்கு மக்களாட்சியில், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களும் பல தேசம் போகலாம்; ஆனால், கற்றவரின் துணையில்லையேல், ஆட்சியாளருக்கே அவலமாகிவிடும்!
ஆதலால், கல்வியின் சிறப்பு எத்தகையது என்பதை அறிய, இதைவிட உதாரணம் வேறில்லை!

அடுத்து, நாம் யாரோடு நம்மைத் தொடர்பு படுத்திக் கொள்ளல் அவசியம் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் அடுத்த இரண்டு பாடல்களில்!

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே!

அப்படி, நல்லவர்களோடு நட்பு கொள்ளும்போது, நமக்கு என்ன கிடைக்கும்?

இந்தப் பாடகைக் கவனியுங்கள்!

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!

நாம் கழனியிலே நெல்லுக்குத்தான் நீர் பாய்ச்சுகிறோம்; ஆனால், அது புல்லுக்கும் போகிறதல்லவா? அதுபோல, இந்த உலகம் உய்வதற்குத் துணையாக இருப்பவர்கள் நல்லவர்கள். ஆதலால், அவர்களுடைய நட்பு அவசியம் என்பதை, அவர்களால்தான் அனைவருக்கும் பயன் விளைகிறதென்பதை, மழையோடு ஒப்பிட்டுச் சொல்கிறார்.

அடுத்து உறவு எப்படி இருக்க வேண்டும்?

இன்றைக்கு அவசியமானது நல்ல உறவுகள், நமக்குத் துணையாக இருப்பதுதான். நமக்குக் கிடைத்த உறவுகள், நம் பிள்ளைகளுக்கு வாய்ப்பதில்லை. அதற்குக் காரணம், நாம் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்ததும், நம் உடன் பிறந்தோர் ஒன்றுக்கு மேல் என்பதும்!!

ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில், பொருளாதார ஏற்ற, இறக்கங்களில், தனிக்குடித்தன வாழ்வும், பெரும்பாலான இல்லங்களில் உறுப்பினர்கள் குறைவு என்பதும் கண்கூடு. ஆக, உறவு முறைகள் அவ்வளவாக பலமாக இருப்பது இல்லை என்பதும், அதன் அவசியத்தை இன்னும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இவர் கூற்றுப்படி ஒரு உறவு உங்களுக்குக் கிடைத்தால், நிச்சயம், நீங்கள் கொடுத்து வைத்தவரே!

அற்ற குளத்தில் அறும்நீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு!

நீர்ப் பறவைகள் எப்படி நீர் வற்றியவுடன், அடுத்த நீர் நிலையைத் தேடி ஓடுகிறதோ, அவ்வாறில்லாமல், நீர்த்தாவரங்கள், நீரோடு சேர்ந்து தானும் மடிவதுபோல,

உறவுகள் நம் துன்பத்திலும் தோள் கொடுக்கக் கூடிய உறவுகளாகப் பெற்றவர்கள் வாழ்க்கை சொர்க்கத்திற்கு ஒப்பானது!

இன்னும் எவ்வளவோ சான்றுகளை, நீதிகளை அடுக்கலாம். ஆனால், நாம் எந்த அளவு ஒரு நூலைத் தனதாக்கி, அதனை நாம் சிந்தையில் ஏகி, அதன் பயனை, வளரும் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில், எடுத்து இயம்புவோமேயானால்,

ஒரு உறுதியான சமுதாயத்தை, உலகுக்கே வழிகாட்டும் சமுதாயத்தை, உன்னத நெறி போற்றும் சமுதாயத்தை, நம்மால் உருவாக்க முடியும்!

செய்வோமா?

அன்புடன்
சுரேஜமீ