Feb 7, 2012

ஐரோப்பிய பயணம் - தொடர் 3


3
நட்பிற்காக
நஞ்சை 
உண்டாலும்
உடன்பாடுதான்
என்பர் 
நட்பின் உயர்வறிவோர்!

நெஞ்சிற்கினிய
நண்பர்களின்
தொலைபேசி,
வலை பேசி
வாழ்த்துக்களுக்கு,
வரையறை இல்லா
வார்த்தைகளை
நன்றியாக 
குவிக்கிறேன்!

இந்த தொடரை
ஒரு பயனுள்ள
பாடமாக
பதிவு செய்ய
எனக்கு 
ஊக்கம் தருவதே
உங்களின்
கருத்து 
ஆக்கம் தானே!

வியன்னாவிலும்
மெல்போர்னிலும்
தனக்கு ஏற்பட்ட
அனுபவங்களை
எனது நண்பர்கள்
பகிர்ந்து கொண்டார்கள்!
அவர்கள் வழியை
நானும் பின்பற்றி 
இருக்கிறேன்!

சரி,
என் இரண்டு ஈரோ
எனக்கு கிடைக்காததற்கு 
காரணம், அடியேன்
கடைப்பிடிக்க தவறிய
நெறியே அன்றி
வேறேதுமில்லை!
சரியான இடத்தில்
சரக்கு தள்ளுவ்வானை (trolley )
நிறுத்தவில்லை!!                                                                      -தொடரும்......

Feb 1, 2012

ஐரோப்பிய பயணம்......தொடர் 2



2
விமானத்திலிருந்து
இறங்கி,
நுழைவு சீட்டை
சரிபார்த்து
குடியேற்று வாயிலைக்
கடக்கையில்
மகிழ்ச்சி
இரட்டிப்பாகிறது!
பயணத்தில் இடையூறு
ஏதுமில்லை எனும்
உறுதியால்;

நிசப்தமான
நிலைய அரங்கு;
கூட்டமில்லை;
முண்டியடித்து
யாரும் நிற்கவில்லை;
பரபரப்பு இல்லை;
சரக்கு தள்ளுவானை (trolley)
நோக்கி சென்று
எடுக்க முற்படுகிறேன்;
முடியவில்லை!
அப்போதுதான்
தெரிந்தது
இரண்டு ஈரோவைத்
தள்ளினால் தான்
சரக்கு தள்ளுவான்
வருமாம்!

என்வசமோ சில்லறை
இல்லை;
மாற்றும் வசதியும்
இல்லை;
கடன் அட்டை
இருந்ததால்;
கவலை இல்லை;

நேர்த்தியின் முதல் படி!
நீங்கள் சரக்கு
தள்ளுவானை 
முறைப்படி அதற்குரிய
இடத்தில் சேர்த்தால்,
உங்கள் பணத்தை
திரும்ப பெறலாம்!
இதுதான் 
"செய்வன திருந்தச்செய்"!
எனும் முதல் பாடம்!
நல்ல விஷயம் தானே?
நம் நாட்டிலும் 
நடைமுறைப் 
படுத்தலாமே!


ஆனால் என் பணம்
திரும்ப கிடைக்கவில்லை!
என்ன ஆயிற்று
என் இரண்டு
ஈரோ?                                                                                                            தொடரும் .....  

ஐரோப்பிய பயணம்......தொடர் 1



1
நவம்பர் 3 , 2011  
இரவு 
குவைத்
விமான நிலையம்
புறப்படுகிறோம்;
புதிதான சிந்தனைகள்
நெஞ்சினில் உலா வர
உல்லாசமாய் தொடங்கிற்று
நெடுநாளைய கனவு!

நள்ளிரவு, 
துபையில் 
ஊர்தி மாற்றம்;
ஜெர்மனி செல்லும்
ஊர்தி எங்களை
வரவேற்கிறது;
அமர்கிறோம்;
ஆனால்,
இமைகள் கண்களை 
மூட மறுக்கிறது!
மூளை வண்ண வண்ண
கனவுகளை
படமாக்கி,
இதயத்தை
இதமாக்கி,
இன்பத்தை 
பரப்ப,
நேரம் நகர்கிறது!
மீராவும், ஜனனியும் கூட
உறங்கவில்லை;

நவம்பர் 4 , 2011 
விடியல்;
கதிரவனின் 
ஒளிக்கீற்று 
சற்றே படிந்திருக்க, 
ஊர்தி பணியாளரின் 
அறிவிப்பு!
Frankfurt   நகரம்
நெருங்குகிறது
என்று!
கண்களும்
இதயமும் போட்டிபோட்டு
ஐரோப்பிய மண்ணை
நோக்குகின்றன!

அடுத்த
பத்தாவது நிமிடத்தில்,
பத்தாண்டுகளுக்கு 
முன்னர் கண்ட
கனவு,
மெய்ப்படுகிறது!
ஆம்!
ஐரோப்பிய மண்ணில்
நாங்கள் கால் 
பதித்து விட்டோம்!!                                                                  தொடரும் .....