எம் தாயும்; எந்தையும்; தமிழும் தந்த கொடை நான்; என் நாவிருந்து ஆட்சி செய்து, எண்ணமெல்லாம் நிறைந்து, நினைத்தபோது தங்கு தடையின்றி என் வார்த்தைகளுக்கு வளம் கொடுக்கும் தமிழே, இங்கு வருவோர் அள்ள; அள்ளக் குறையாத, தீந்தமிழ் தேன் பருகி, தென்றலில் தவழ்ந்து, எண்ணமெல்லாம் ஏற்றம் பெற்று, பாரினிலே பலர் மெச்ச வாழ்ந்திடுவர் நாளுமே!
நண்பர்களே, நான் இலக்கணம் கற்றவன் அல்ல. புத்தகங்கள் படிப்பவனும் அல்ல; ஆதலால், சொற்பிழை, பொருட்பிழை இருப்பின் தயங்காமல் என்னை, மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Jan 22, 2015
அம்மா
ஒரு புள்ளியை கோலமாக்க பத்து மாதம் பரிதவித்த பாசமலர்!
உயிரைக் குறுக்கி உதிரம் பெருக்கி உதரம் செலுத்தி உருவம் கொடுத்த உலகம்!
நொடியில் பிறண்டு அடுத்து தவழ்ந்து கணத்தில் நடந்து மழலை பேச மணியும் பொறுக்கா அன்பின் திறவுகோல்!
ஐந்தில் வளைத்து பத்தில் உரைத்து கல்வியின் மேன்மை கதைபல கூறி வளம்பட வாழ வழிவகைத்திட்ட வள்ளல்!
இருபது தொடங்கி வருவது எதுவோ சுயக்கால் நின்று தெளிவுடன் ஏறப் பழக்கிடும் வழிகாட்டி!
மணமகள் தேடி மனைபல ஏறி குலமகள் ஏற்றி தன்னினம் செழிக்க தன்னலம் மறக்கும் தகைசார் தெய்வம்! - சுரேஜமீ