சிற்பங்கள் சொல்வதென்ன?
எண்ணக் கருவாக்கி
எனக்கோர் உருவமிட்டு
வண்ணக் கனவுகளை
வார்த்து எடுக்கின்றாள்!
வாழும் வாழ்வினிலே
வந்துபோகும் எண்ணமெலாம்
வாழ்ந்தால் வரலாறு
வீழ்ந்தால் வரும்நாளும்!
மனங்கள் ஒன்றாக
மணலே சாட்சியாக
மன்னன் துணையாக
மங்கை மகிழ்வாக
மண்ணின் சிற்பங்கள்
சொல்லும் சேதியென்ன?
வாழ்வில் இருபக்கம்
வசந்தம் ஒருபக்கம்
வாடும் மறுபக்கம்
வளைத்துப் பழகிக்கொள்!
வாழ்வே சுகமாகும்
வளர்தமிழ் தினம்படித்து
வள்ளுவம் ஏகிடுவாய்
வாழ்வின் நெறிவிளங்கும்!
துருவ முனைபோல
இருதிசை இருந்தாலும்
ஒருமுகம் பார்த்திருக்க
உறவும் பெருகிடுமே!
அலைகள் அழித்துவிடும்
அழகிய எனைக்கூட!
அதற்கென அழுவதில்லை
அழகாய்ச் சிரித்திடுவேன்!
அழிவினை நினைத்திருந்தால்
ஆக்கமும் வந்திடுமோ?
ஊக்கமும் கொண்டிடுவாய்
ஏக்கங்கள் தொலைந்திடுமே!
வாணும் வையகமும்
வானவர் போற்றுதலும்
வளைக்கரம் பெற்றிடவே
வான்புகழ் கொண்டிடவே!
நாயகன் மனமாறி
நங்கையின் முகம்பார்க்க
நற்துணை யாயிருந்து
நயமுடன் வாழ்வதற்கு!
நானும் உருப்பெற்றேன்
நாழிகை வரம்பெற்றேன்
நானிலம் பார்த்துவிட்டேன்
நானுனைச் சேர்ந்தும்விட்டேன்!!
கலையென மகளிருக்க
கண்ணிலும் மறைத்திருக்க
காட்சியும் தெரியலையோ
காளையின் மனதிற்கு?
கருத்தாய் எழுந்துவிடு
காலமும் கரம்சேர்த்து
கலைநிகர் படைப்பதற்கு
கன்னியும் இருக்கின்றாள்!
கணத்தினில் மறந்துவிடு
கடந்தன துன்பமெலாம்
கடலலை கரைக்குமுன்னே
கண்கவர் சிலையெனைப்பார்!
கன்னியின் துணையாலே
கண்டிட்டேன் இன்பம்யான்
காத்திரு உனக்குமவள்
கலைநிகர் வார்த்தெடுப்பாள்!
நம்பிக்கை கொண்டெழுவாய்
நாயகி கைகோர்ப்பாய்
நாளையும் வந்திடுவாய்
நானுனில் கலந்திருப்பேன்!
மணலினின் தேடாதே
மானுடம் தேடிஎடு
காற்றினில் கலந்துவந்து
கடவுளாய் வாழ்த்திடுவேன்!!
அன்புடன்
சுரேஜமீ
No comments:
Post a Comment