உலக பூமி தி(த)னம் - ஏப்ரல் 22
என் பிழை என்ன?
என் பிழை என்ன?
மண்ணில் சொர்க்கமாக
மானுடம் வாழ்வதற்கு
தன்னை அளித்தேன்
தான் அறிவாரோ?
ஓடும் நதிகளும்
தேடும் இரைகளும்
வருடும் தென்றலும்
வனப்பும் மிகுதியாய்
மண்ணும்; பொன்னும்
பொருளும்; போகமும்
வளர்நிறைக் காடும்
வான்மழை பொழிவும்
வாரி வழங்கினேன்;
வாழ்க்கை சுகத்திற்கு!
வேண்டுவன கொடுத்து
வேதனை அடைகின்றேன்!
என்ன சொல்ல?
இனியும் பிறப்பேனா?
இன்னல் தொலைப்பேனா?
என்னவெலாம் செய்தென்னை
ஈட்டி கொண்டு பிளக்கின்றார்?
காடெல்லாம்
கலைத்து
மேடென்றும்
பள்ளமென்றும்
அவரவர் தரம் பிரிந்து
ஆலைகளும்
சாலைகளும்
அமைக்கின்றார்!
காணிகள்
கலைத்து
கட்டிடங்கள்
கட்டுகின்றார்!
வெட்டி வெட்டி
வேறறுத்து
நானிலத்தை
நஞ்சாக்கி
அணுவென்றும்
ஆய்வென்றும்
தக்க தக்கத்
தாதுவென்றும்
சுட்டுச் சுட்டு
சூடேற்றி
சூழ்நிலையக்
சூன்யமாக்கி
சுகப்படத்
துடிக்கின்ற
மானுடமே!
நானும் உன் அம்மாதான்!
யான் செய்த
பிழையென்ன?
நீ செய்யும்
பிழைக்கெல்லாம்
பழிபொறுத்த
காரணத்தால்
வரும் நாளில்
மூச்சுக்கும்
காற்றின்றி
தவிப்பிற்கும்
நீரின்றி
பிரளயத்தில்
மூழ்கிடுவோம்
உன்னால் நானும்
என்னால் நீயும்!
விழித்துவிடு
இப்பொழுதே
இனி வாழும்
வாழ்க்கைக்கு!
என்னை வாழ விடு!
ஏற்ற நல்ல வாழ்வு தர!!
அன்புடன்
சுரேஜமீ
No comments:
Post a Comment