முத்தமிழே முருகா
வள்ளலின் தமிழ் என் கைகொண்டு எழுதிய பா!
- சுரேஜமீ (26/08/2013)
நண்பர்களே என்ன ஆச்சரியம்! இத்தனை நாள் நான் தேடிய கோவில் இதுதானென்று நறுக்கென்று மண்டையில் கொட்டி ஒரு கவிகொடுத்துச் சென்றான் வள்ளல்;
அவனுக்குத்தான் அவ்வளவு கோபம்; இதுவென்று பலர் சொல்லியும்; அவன் என்னைத் தேடும் நிலை மறந்து; நான் தேடிக்கொண்டேயிருக்க, இன்று ஒரு படத்தை என்னெதிரே காட்டி, வா என்று சொன்ன வள்ளலே! வரும் நாளில் வருகிறேனடா!
நீயல்லா தெய்வமில்லை; முருகா என் நெஞ்சே நீ வாழும் எல்லை!!
இதோ இன்று அவன் என் எண்ணம் கொண்டு எழுதிய வண்ணக் காவியம்!
நாங்கள் ராமேஸ்வரம் அருகிலிருந்து திருச்செந்தூர் பாதயாத்திரை செல்வது வழக்கம்! எனக்கு 10 வயதிலிருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்தது பயணம்!! அதைத்தான் நன்றி மறவாமல் வடித்திருக்கிறான் பாட்டில்!
வாழ்க தமிழ்க் கடவுள்! உன்னை வாழ்த்தும் முதல் மனிதன் நான்தான்! கடவுளையே வாழ்த்தக் கற்றுக் கொடுத்ததும் உன் தமிழன்றோ!!
வள்ளலின் தமிழ் என் கைகொண்டு எழுதிய பா!
முதியவனா நானில்லை முத்தே முருகா
மூவுலக வாழ்க்கையுமே அறியேன் முருகா
முத்தமிழும் நாவறிந்த வயதே முருகா
முற்றுமுனை நானறிய வந்தேன் முருகா
பச்சையிளம் பாலகனாய் தந்தையுடனே
பாதயாத்திரைக்குப் புறப்பட்டேன் பாலன்தானே
நெற்றியிலே நீறிட்டு நிதமுந்தன்
நாமந்தனை ஒதி நின்றே
முதல்நாளில் புறப்பட்டு சிக்கல்தங்கி
மறுநாளில் வந்தடைவோம் வைப்பாறுமே
வரும் நாளில் தூத்துக்குடியும் தங்கி
வளர் நாளில் வந்தடைவோம் சந்நிதியுமே!
நாலுகால் மண்டபத்தில் உறங்கி முருகா
நாலிநல்ல கிணறுதனில் குளித்து முருகா
நாடிவரும் அந்தணர்தம் தயவில் முருகா
தேடிவந்த செல்வம்தான் முன்னால் முருகா
எவைகேட்டு நான்வந்தேன் சொல்வாய் முருகா
என்னருமைத் தமிழ்வேந்தே நீதான் முருகா
சொன்னவண்ணம் செய்திடவே வருவாய் முருகா
சொல்கேட்டால் கதிவிளக்கும் கடவுள் முருகா
கனவிலொரு காட்சியாய் வந்தாய் முருகா
காணவேண்டி நாளும் இதைப்பகிர்ந்தேன் முருகா
காண்இலங்கைக் கோயிலென நானும் முருகா
காணும் இதுநாள்வரையில் நினைத்தேன் முருகா
இப்படமும் சொன்னதுவே இவ்வூரென்று
இனிமையான நல்லூரும் இதுவேயென்று
இத்தலத்தில் பட்டகால்தான் தவமேயன்றி
இப்பிறப்பில் வேறேதும் வேண்டேன்யானும்
உத்திரமும் வந்திடுதே உன்பேர்சொல்ல
ஊருடைத்துப் பேருடைத்து உற்றான்நீயே
உன்புகழைப் பாடுகின்ற உத்தமர்தம்மை
உன்னதமாய் வைத்திடும் முத்தமிழேயப்பா
உத்திரத்துப் பின்வைத்துப் படைத்தாய் என்னை
உதிரத்தில் சொல்வைத்து பார்க்க உன்னை
உத்தரவாய் வரும்வார்த்தை தமிழே நீயே
உன்பாதம் சரணடைந்தேன் உயர்வாய் நானே!
- சுரேஜமீ (02/04/2015)
நானும், எனது தந்தையும் பயணிக்கிறோம். பிரமாண்டமான கோயிலுக்குள் நுழைகிறோம். வழிபாடு செய்கிறோம். பிரகாரம் வழியாக வெளி வாயிலில் வந்து சிறிது தூரம் நடக்கிறோம். நான், என் தந்தையை கேட்கிறேன். அப்பா, இங்கே ஒரு முருகன் ஆலயம் உண்டே என்று. என் தந்தை ஆமோதிக்கிறார்.... சற்றே தொலைவில், சமுத்திரம் தெரிகிறது.......என்ன ஆச்சர்யம்? முழுதும் கடலால் சூழப்பட்டு, சிறிய ராஜகோபுரம், பிரகாரங்கள், கொடிகம்பத்துடன் முருகன் ஆலயம். எப்படிச் செல்வது என்று என் தந்தை யோசிக்கிறார். அப்பா, நாம் செல்கிறோம் என்று, என் தந்தையை, நான் கட்டாயப்படுத்துகிறேன்.....சரி என்று, நானும் என் தந்தையும், கடலுக்குள் இறங்கி, அந்த கோயில் வளாகத்துள் நுழைகிறோம். முழுதும் நீர்.....பாதை என்ற நம்பிக்கையில், கடல் நீரில் நடக்கிறோம்! என் தந்தை, எச்சரிக்கிறார்....பாம்பு முதலான ஊர்வன, செடி கொடிகள், இருக்கலாம்.....நீ என்னை கட்டாயப் படுத்துகிறாயே என்று! முதலில் கொடிக் கமபத்தைத் தாண்டுகிறோம். பின்னர், முருகனின் வாகனமான மயில்.....கண் கொள்ளாக் காட்சி!!!! மனம் லயிக்கிறது!
முருகனடிமை ஆயிற்றே!!!! பால் மனம் மாறாத பிஞ்சு வயதில், ஆண்டவனிடம், என்ன கேட்பது என்று தெரியாத அந்த வயதில், சகோதரர்கள் மூவரும், தந்தையும், பூசத்திற்கு பழனியும், விசாகத்திற்கு திருச்செந்தூரும், பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம். கிட்டத்தட்ட, பழனி 350 km ; திருச்செந்தூர் 170 km.
அந்த வாஞ்சை, மனதின் ஓரத்தில் நின்று, அந்த முருகனின் எழில் காணத் துடிக்கிறது...... கோவிலைக் கடல் எப்படி சூழ்ந்தது எனத் தெரியவில்லை.... ஆனால், அலைகள் சற்றும் இல்லாத, ஆள் அரவமும் அற்ற, ஒரு பிரதேசமாகக் காட்சி அளித்த, அந்த எம்பெருமான் முருகனைக் காண, கண்கள் தேடும் வேளையிலே, ஒரு குரல்.......ஸ்கந்த குரு கவசம் பின்னனியில் ..........அஞ்சனா......அனுஜா... ....எழுந்திரு மா........school போகணும் இல்லியா.....time ஆயிடுச்சு ............அஞ்சனா......அனுஜா. ..... அந்தக் குரல் என்னையும் எழுப்பியது...... என் மனைவி அருகில்.......விழித்துப் பார்த்தேன்......வந்தது கனவு என்று அறிந்தேன்!!!
கனவாக இருந்தாலும், அதன் சுகம் பெரிது!!!!! அனுபவித்துப் பார்த்தால் புரியும்.......சில மணித் துளிகளுக்குப் பிறகு.....என் மனைவி, பாலை அடுப்பில் வைத்து விட்டு, குழந்தைகளைத் தயார்படுத்தும் மும்மரத்தில், பால் அடுப்பில் இருந்ததை, மறக்க, பால் முழுதும் பொங்கி வழிந்திருந்தது.......நான் சொன்னேன், முருகன் உன் பாலைத் எடுத்துக் கொண்டானென்று.......கண்ணனுக்கு தயிர் பிடிக்கும், அந்த முருகனுக்கு பால் பிடிக்கும்.....
சரிதானே?
இந்தப் பதிவின் நோக்கம், எவரேனும், முற்றிலும், நீராலோ, கடலாலோ, சூழப்பட்ட முருகன் கோயில் தெரிந்திருந்தால், எனக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பதுதான்.......மேலும் , கனவு ,
விட்ட இடத்தில்,தொடர்ந்த அனுபவம், யாருக்கேனும் இருந்தால் தெரியப்படுத்தவும்.
No comments:
Post a Comment