Apr 15, 2015

உன்னை அறிந்தால் - வரும் தலை முறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

சில வேளைகளில், நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நம்முடைய முன்னோர்கள் எத்தகைய பண்புடையவர்கள்? என்று சிந்திப்பதற்காகத்தான், ஒவ்வொரு மொழியிலும் இலக்கியங்கள் படைக்கப் படுகின்றன!
இது வரலாறு; வரும் தலை முறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

கம்பனைப் பற்றித் தெரியாத தமிழன் இருக்க முடியாது! அத்துனை புகழ் வாய்ந்த கம்பன், தன் இராமாயணத்தின் கடைசிச் செய்யுளில், தன் இனத்தின் பெருமையைத் தூக்கி நிறுத்துகிறான் என்று சொன்னால் மிகையாகாது!

இதோ உங்களுக்காக......
அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி!
விளக்கம்:
அரச பீடத்தை அனுமன் தாங்கிப் பிடிக்கின்றான். அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்கின்றான். பரதன் அரச குடையைப் பிடித்து நிற்கின்றான். இலக்குவனும், சத்ருக்ணனும் கவரி வீச, அழகிய மணம் வீசும் கூந்தலை உடைய அன்னை சீதாப் பிராட்டி பெருமிதமாய் நிற்க,

யார் அரச மகுடத்தை வசிட்ட முனியிடம் கொடுக்கிறார்கள்?

அங்குதான் தமிழன் பண்பாடு தலை நிமிர்த்துகிறது; இராமன் ஒரு தெய்வப் பிறவி. அருளாளர் சடையப்பர் ஒரு மனிதப் பிறவி.
ஆனால், இந்தக் கம்பன், அந்த இராமனைப் பற்றி எழுத அருள் செய்த, பொருள் தந்த வள்ளல் சடையப்பர். ஆகக் கம்பன் முடிவு செய்கிறான்;
இராமனுக்கு முடி சூட்ட வேண்டுமென்றால், அதற்கு அவனை விடத் தகுதி வாய்ந்த ஒருவன், அந்த மகுடத்தை இராமனுக்கு அளிக்க வேண்டுமென்று!
அந்தத் தகுதி பெற்ற சடையப்ப வள்ளலின் மரபு வந்தோர் எடுத்துக் கொடுக்க, வசிட்ட மாமுனி கிரீடத்தை இராமனுக்குச் சூட்டுகிறார் என்று புனைந்தான்.

ஒரு அவதார புருஷனை விட உயர்ந்தது, ஒரு மானுட உள்ளம் என்பதை, ஆண்டவனுக்கே எடுத்துரைத்தான் என்று சொன்னால்,

நண்பர்களே, உணருங்கள் உங்கள் பண்பு நெறிகளை! 
போற்றுங்கள் உங்கள் முன்னோர்கள் கட்டிக் காத்த உயரிய குணங்களை!!
- சுரேஜமீ

No comments:

Post a Comment