Jan 14, 2015

தை மாதம் வந்துவிட்டால்
தமிழனுக்கு உந்துதல்தான்
உள்ளமெலாம் குதூகலிக்க
ஊரெலாம் கொண்டாட்டம்!

பாடுபட்டுத் தானுழைத்து
பாரெங்கும் பசிபோக்க
கழனியிலே வளர்ந்தவளை
கண்ணிமையாய்க் காத்துவந்து
மனைசேர்த்த மகிழ்ச்சிதானே
மண்சார்ந்த பொங்கலுமே!

ஆடியிலே வித்திட்டுத்
அன்றாடம் காத்திட்டு
நன்மகளாய்ப் பெற்றெடுக்க
நாளெல்லாம் கனவுகண்டு
தைமகளைக் கண்டதுமே
தாயன்பு வந்ததுகாண்!

நாற்றுவளர் நெல்மணியே
நன்மக்கள் பேறிணையே
நாடிவந்த நன்மகளே
நம்பிக்கைத் தைமகளே
நேற்றுவரைப் பட்டதெல்லாம்
காற்றினிலே பறந்ததுகாண்!

வீடெல்லாம் வெள்ளயடி
வீட்டுக்குள்ளே தென்றலடி
உள்ளமெலாம் கொள்ளையடி
ஊர் முழுக்க கொட்டமடி
புத்தாடை வண்ணமடி
பூக்கின்ற வாசமடி!

வாங்கிவந்த பானையடி
வரவு நோக்கும் பகலவனை
வந்திடுவர் உனைனோக்க
உறவுசேர்த்து மகிழ்ந்திடடி
பொங்கலிட்டுப் படையலடி
பெருமிதமாய் வாழ்ந்திடடி!

தமிழனுக்குத் திருநாளாம்
தரணியெங்கும் பொன்னாளாம்
தைப்பொங்கல் நன்னாளாம்
தகைசார்ந்த பெருநாளாம்
தன்னிகறற்ற ஒருநாளாம்
தாய்மண்ணின் விழாநாளாம்!!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! - சுரேஜமீ






No comments:

Post a Comment