Oct 11, 2012

விநாயக சதுர்த்தி

கஜமுகனை நினை மனமே
தினம் தினம் குதூகலமே;
ஒருமுறை அவன் நாமம் சொன்னால்
உருவாகும் அற்புதமே!

நல்வினை நல்கிடுவான்
நாளும் அவன் அடிபணிந்தால்;
நாமகள் அருள்புரிவாள்
விநாயகன் துணை நின்றால்!

ஞானத்தைக் கொடுப்பவனை,
வரும் இடர் தவிர்ப்பவனை,
முப்பொழுதும் உணர்ந்தவனை,
முழுவதும் நம்பியவனை,
முன்னின்று காத்திடுவான்
முக்கண்ணன் புத்திரனே!

வேண்டுவது தந்திடுவான்
வேலவனின் சோதரனே
முக்கனியும்; மோதகமும்;
முப்பாலும் கொண்ட தமிழால்
அர்ச்சித்து மகிழ்வோரை
அருகிருந்து காப்பவனே!

தேய்பிறை சதுர்த்தியிலே,
சந்தி வரும் வேளையிலே,
பூஜிக்கும் அன்பருக்கே,
வேண்டுவன தந்திடுவான்!
மேன்மை பெறச் செய்திடுவான்;

சிந்தையிலே கணநாதன் 
மெல்ல வந்து அமர்ந்துவிட்டால்;
உள்ளமது தெளிந்திடுமே,
ஊக்கமது பிறந்திடுமே!!
சொல்ல ஒரு வார்த்தை ஏது?
சொக்கநாதன் மைந்தனே!

கஜமுகனை நினை மனமே
தினம் தினம் குதூகலமே;
ஒருமுறை அவன் நாமம் சொன்னால்
உருவாகும் அற்புதமே!                                                              - சுரேஜமீ 

(Sep 19, 2012 - Vinayaga Chathurthi)

No comments:

Post a Comment