May 7, 2015

வாழுகின்ற தமிழுக்கு ஒப்பாக வாழுபவன்!


வாழ்த்துக்கள் வருவதற்கு வரம்வேண்டி நிற்போர்முன்
வானவரே வலியவந்து வாழ்த்துவது கண்டவன்தான்
வையத்திலொரு கவியாம் கவிக்கெல்லாம் அரசனவன்
வாழுகின்ற தமிழுக்கு ஒப்பாக வாழுபவன்!

கூடுகின்ற கூட்டமெலாம் கூவிநிற்கும் குயில்களாக
பாடுகின்ற பாட்டெல்லாம் படைத்தவனே பகன்றதன்றோ!
தேடுகின்ற நெஞ்சமெலாம் தேடிவைத்த சொத்துமவன்
வீடுதோறும் நிறைந்திருக்கும் வீதியெல்லாம் புகழ்மணக்கும்!

அன்னைத் தமிழ்கண்ட அருமைத் தவப்புதல்வனவன்
அவன்புகழைப் பாடுதற்கு அவனியில் யார்தகுதியென்று
அவனிருந்து எடுத்ததுதான் ஆலமரமான தென்றால்
அவனுக்கும் துணைவேண்டி அடுத்தவனும் வருகின்றான்!

பாட்டெழுதி நோட்டடிக்கும் பரிதாப நிலையில்லை
பாட்டேவந்து நிற்கும் தனைஎழுது தமிழாலென்று
பாட்டவனும் புனைந்திடவே பாரெல்லாம் மகிழ்ந்திடவே
பாட்டாளி வர்க்கமெலாம் பைந்தமிழால் நனைந்ததன்றோ!

கூட்டிவரும் கூட்டமெலாம் கூண்டோடு கலைந்துவிடும்
கூடுகின்ற கூட்டமெலாம் பார்போற்ற நிலைத்துவிடும்
கலைக்கூடம் சொல்லுமிதை இவன்பெற்றார் எவரென்றே
கண்ணதாசன் வழிவந்த வாழியவன் வணங்கிடென்றே!!

வாழி வாழி கவியரசர்;  வாழி வாழி கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்(பம்மல்)
வாழி வாழி காவிரியே; வாழி வாழி சுரேஜமீ!




No comments:

Post a Comment