Sep 24, 2011

சங்கீதம்!

மெல்ல இரவு
தன்னை 
மழித்து
ஆதவன்
வரவு நோக்கிக் 
காத்திருக்கும் 
அதிகாலை வேளையில்,

இனியதொரு
நாள் தொடங்கும்
புட்கள் முதல் 
பூக்கள் வரை
புன்னகைக்கும்
மெல்லிசை 
சங்கீதம்!

மலையினிடை
உருவாகி
மண் நோக்கிப்
பெருக்கெடுத்து 
சமவெளியில்
சாலையிட்டு 
கடல் கலக்கும்
புனல் எழுப்பும் 
புன்னகையும் 
சங்கீதம்!

பெருங்காட்டின் 
மரங்களிடைப் 
பூங்காற்று 
தவழ்ந்து 
வரும் ஓசை
சங்கீதம்!

கார்மேகக் 
கூட்டமது 
போர்மழைக்கு 
முன்னாலே 
வாழ்த்தும் அந்த
மெல்லிய தூறல் 
தரும் ஓசை
சங்கீதம்!

வெங்கதிரோன் 
வெப்பத்தில் 
காய்ந்த மரம்
சருகாகி
நிலமீது விழும் ஓசை
சங்கீதம்!

கருவுற்ற 
தாயின் 
கருப்பையில் 
வளருமந்த சேய்
கொடுக்கும் ஓசை
ஒரு இதமான
சங்கீதம்!

அடிப்படையாய் 
இவையிருந்து 
அடி தொடுத்த 
ராகங்கள்
மடை திறந்த 
வெள்ளம்போல் 
மகிழ்ச்சியது 
தந்ததென்றால் 
மறுப்போரும் 
எவருண்டோ?                                         - சுரேஜமீ

No comments:

Post a Comment