Dec 26, 2012

இழிகுலத்தைப் பெற்றெடுக்க?


ஏ  தமிழ்ச் சாதியே 
இன்னும் என்ன உறக்கம் 
உன் பிஞ்சு மழழைகளின் 
கொஞ்சும் மொழியில் 
நான் இல்லை?

என்னால் உலகம் தலை நிமிர 
உன்னால் நானோ தலை குனிய 
அன்றே சொன்னான் ஒருவன் 
"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" மென
அடுத்து வந்த 'பாரதி', அவனை 
'பேதை உரைத்தான்' என்றான்!
இருவரும் எந்தன் பிள்ளைகள்தான்...
ஒருவன் வெந்து சொன்னான்;
மற்றவன் நொந்து சொன்னான்;

ஆனால், 
இன்றோ இயன்றவரை என்னை 
இயம்புவது தவிர்க்கின்றீர்?
நாணிக் கோணி நுனி 
நாக்கில் ஆங்கிலம் பேசி 
நாளும் உறவை வளர்க்கின்றீர்;
என்ன தவம் செய்தனை நான்?
இப்படி ஒரு இழிகுலத்தைப் 
பெற்றெடுக்க?

தாத்தன்; பாட்டன்; முப்பாட்டன்;
கட்டிக்காத்த பண்புகளை 
காற்றோடு விட்டு 
சுவாசத்தைத் தேடும் 
சுயநலமே!
நீ கருவாய்; உருவாய்;
உணர்வாய்; உளவாய்;
மாண்பாய்; மதியாய்;
பண்பாய் ; பரிவாய்;
கற்ற; பெற்ற;உற்ற 
அத்தனையும் என்னுள் உளது 
என்பதனை எப்போது 
அறிவாய்?
உன்னால் நான் வாழ்கின்றேன் 
எனும் இறுமாப்பை விட்டொழி;

ஆயிரம்; ஆயிரம் ஆண்டுகள் 
இன்னும் நானும் வாழ்கின்றேன்
இனியும் நானும் வாழ்ந்திடுவேன்;
உன்னைபோன்ற அறிவிலிகாள் 
எந்தன் பிள்ளை எனமாட்டேன்;
மாண்டு போகும் நீயே 
மண்ணில் வாழும்போது 
மாண்புகள் பெற்ற எனைப் 
போற்ற இன்னும் ஆயிரம்
பாரதியும்; இளங்கோவும்;
வள்ளுவனும்; 
பிறந்தும்; இறந்தும் 
பிறப்பார்கள்;
புவியினில் என்னால் 
புகழீட்டி மானுடம் 
போற்ற வாழ்ந்திடவே!

இனி நான் கூறுவேன் 
தமிழினமே!

இருசாதியுண்டு தமிழுலகில் 
என்னைப் போற்றும் ஒரு சாதி 
அதுவே இனிமேல் என் சாதி!
தன்னைப் போற்றும் ஒருசாதி 
அதுவே இனிமேல் மறு சாதி!
தரங்கெட்ட இனத்தின் 
தலை சாதி!!

'தமிழ் இனி' என 
குறும்படம் எடுத்த 
என்பிள்ளைகள்; 
கலங்காதீர்......
என்னை அழிக்க விடமாட்டேன்;
என்றும் உன்போல் சிலரிருக்க;
வாழ்த்துச் சொல்லி 
வளர்கின்றேன்!!! 
வாழி என்சாதியென்று!!!    

No comments:

Post a Comment