Apr 20, 2015

உன்னை அறிந்தால் - வரும் தலைமுறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

நம் கல்விமுறையில் மாற்றம் வேண்டுமென்பது, பெரும்பான்மையினரின் கருத்தாக, இற்றை நாட்களில் இருக்கிறது. இதற்குப் பின்னனி என்ன என்று யோசித்தால், வாழ்வியல் சார்ந்த கல்வியாக, தற்போதைய கல்வி இல்லை என்பதும், ஒரு தேர்விற்காகத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் மனனம் சார்ந்த ஒரு புத்தக அறிவை மட்டுமே தருகிறது என்பதும், குற்றச்சாட்டாக இருக்கிறது.

கல்வி என்பது சிந்தனை ஆற்றலை, பகுத்து உணரும் அறிவை, சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் தன்மையை, வாழ்க்கை நெறியை உய்விக்கும் கோட்பாடுகளை,

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கொடுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது! 
ஆனால், நாம் படித்ததை, நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்தி, நம்மைச் செதுக்கினோமா? என்றால், அதற்கான விடையைத் தேடும் சமுதாயமாக, வளரும் சமுதாயம், இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது!

ஒரு பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே.

'ஐந்தில் வளையாதது; ஐம்பதில் வளையாது! என்பது;

ஆகவே தான், நல்ல பல கருத்துக்களை, மிகவும் சுருக்கமாக, குழந்தைகளுக்கு, ஆரம்பக் கல்வியில் வைத்தார்கள்! ஆனால், அதன் ஆழத்தைப் பெற்றோர்கள் உணர்த்தினார்களா?
என்பதில் தான், கல்வியின் மேம்பாடு இருக்கிறது!
இன்றைக்கு ஆங்கில வழிக் கல்விதான், உலகத்திலேயே சிறந்தது என்ற நினைப்புதான், ஆதாரக் கல்வியான தாய்மொழிக் கல்வியின் சிறப்பைக் கெடுக்கிறது.

ஆங்கிலம் என்பது ஒரு அன்னிய மொழி அறிவு! அவ்வளவே! அது சூழலால் ஏற்படுவது. மொழி அறிவு என்பது, ஒரு புரிதல் சாதனம்! அதுவே, அறிவின் உச்சமாகிவிடாது!

தாய்மொழிக் கல்விதான் தரத்தின் அடையாளம்!

அதற்கேற்ப, தமிழ்க் கிழவி ஔவையாரின் சில பாடல்களும், அதன் கருத்துக்களும், வளரும் சமுதாயத்திற்காகப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்!

கல்வியின் சிறப்பு என்ன? ஏன் படிக்க வேண்டும்? படித்தால் தான் வாழ முடியுமா? என்ற கேள்விகளுக்கு, ஔவையார் என்ன சொல்கிறார் என்று சிந்தியுங்கள்!

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு!

இதைவிடப் பிஞ்சு உள்ளங்களில், கல்வியின் சிறப்பைச் செம்மையாகச் சொல்ல இயலுமா? ஆகக், குழந்தைகள் சிந்திக்க வேண்டுவது, நாம் ஒரு தேசத்தில் மட்டுமே இருக்க வேண்டுமா? அல்லது, மன்னனினும் உயர்வாகக் கற்றவராக இருந்தால், சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறமுடியும்!

இன்றைக்கு மக்களாட்சியில், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களும் பல தேசம் போகலாம்; ஆனால், கற்றவரின் துணையில்லையேல், ஆட்சியாளருக்கே அவலமாகிவிடும்!
ஆதலால், கல்வியின் சிறப்பு எத்தகையது என்பதை அறிய, இதைவிட உதாரணம் வேறில்லை!

அடுத்து, நாம் யாரோடு நம்மைத் தொடர்பு படுத்திக் கொள்ளல் அவசியம் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் அடுத்த இரண்டு பாடல்களில்!

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே!

அப்படி, நல்லவர்களோடு நட்பு கொள்ளும்போது, நமக்கு என்ன கிடைக்கும்?

இந்தப் பாடகைக் கவனியுங்கள்!

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!

நாம் கழனியிலே நெல்லுக்குத்தான் நீர் பாய்ச்சுகிறோம்; ஆனால், அது புல்லுக்கும் போகிறதல்லவா? அதுபோல, இந்த உலகம் உய்வதற்குத் துணையாக இருப்பவர்கள் நல்லவர்கள். ஆதலால், அவர்களுடைய நட்பு அவசியம் என்பதை, அவர்களால்தான் அனைவருக்கும் பயன் விளைகிறதென்பதை, மழையோடு ஒப்பிட்டுச் சொல்கிறார்.

அடுத்து உறவு எப்படி இருக்க வேண்டும்?

இன்றைக்கு அவசியமானது நல்ல உறவுகள், நமக்குத் துணையாக இருப்பதுதான். நமக்குக் கிடைத்த உறவுகள், நம் பிள்ளைகளுக்கு வாய்ப்பதில்லை. அதற்குக் காரணம், நாம் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்ததும், நம் உடன் பிறந்தோர் ஒன்றுக்கு மேல் என்பதும்!!

ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில், பொருளாதார ஏற்ற, இறக்கங்களில், தனிக்குடித்தன வாழ்வும், பெரும்பாலான இல்லங்களில் உறுப்பினர்கள் குறைவு என்பதும் கண்கூடு. ஆக, உறவு முறைகள் அவ்வளவாக பலமாக இருப்பது இல்லை என்பதும், அதன் அவசியத்தை இன்னும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இவர் கூற்றுப்படி ஒரு உறவு உங்களுக்குக் கிடைத்தால், நிச்சயம், நீங்கள் கொடுத்து வைத்தவரே!

அற்ற குளத்தில் அறும்நீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு!

நீர்ப் பறவைகள் எப்படி நீர் வற்றியவுடன், அடுத்த நீர் நிலையைத் தேடி ஓடுகிறதோ, அவ்வாறில்லாமல், நீர்த்தாவரங்கள், நீரோடு சேர்ந்து தானும் மடிவதுபோல,

உறவுகள் நம் துன்பத்திலும் தோள் கொடுக்கக் கூடிய உறவுகளாகப் பெற்றவர்கள் வாழ்க்கை சொர்க்கத்திற்கு ஒப்பானது!

இன்னும் எவ்வளவோ சான்றுகளை, நீதிகளை அடுக்கலாம். ஆனால், நாம் எந்த அளவு ஒரு நூலைத் தனதாக்கி, அதனை நாம் சிந்தையில் ஏகி, அதன் பயனை, வளரும் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில், எடுத்து இயம்புவோமேயானால்,

ஒரு உறுதியான சமுதாயத்தை, உலகுக்கே வழிகாட்டும் சமுதாயத்தை, உன்னத நெறி போற்றும் சமுதாயத்தை, நம்மால் உருவாக்க முடியும்!

செய்வோமா?

அன்புடன்
சுரேஜமீ

No comments:

Post a Comment